நீட் தமிழ் வினாத்தாளில் 49 கேள்விகள் தவறாக மொழி பெயர்ப்பு மாணவர்களுக்கு 196 மதிப்பெண் கூடுதலாக வழங்க வேண்டும் : சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

நீட் தமிழ் வினாத்தாளில் 49 கேள்விகள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளதால் தமிழில் நீட் தேர்வு எழுதிய 24 ஆயிரம் மாணவர்களுக்கு சிபிஎஸ்இ கூடுதலாக 196 மதிப்பெண் வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். 

டெக் பார் ஆல் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ராம்பிரசாத் சென்னையில் நேற்று கூறியதாவது: மே 6ம் தேதி நடந்த நீட் தேர்வு வினாத்தாள் தமிழில் சரிவர மொழி பெயர்க்கப்படவில்லை. சிபிஎஸ்இ புத்தகங்கள் தமிழில் இல்லாததே இதற்கு காரணம். சிறுத்தை என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டிய ஒரு கேள்வியில் ‘சீட்டா’ என்ற ஆங்கில வார்த்தையை ‘சீத்தா’ என்று தவறாக மொழி பெயர்த்துள்ளனர்.

அதே ‘மல்ட்டிப்புள்’ என்ற வார்த்தைக்கு மொழி பெயர்ப்பாக ஒன்றுக்கும் மேற்பட்ட என்ற வார்த்தை ‘பலகுட்டு’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் ‘பேட்’ ஆங்கில வார்த்தை ‘வவ்வால்’ என்று தமிழில் ெமாழி பெயர்க்கப்படவில்லை. 

இதுபோல், மொத்தம் 49 கேள்விகள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. நீட் வினாத்தாளில் மொத்தமே 180 கேள்விகள். ஓரிரு கேள்விகள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டிருந்தால், அதை அப்படியே விட்டுவிடலாம். 49 கேள்விகள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளதால், தமிழில் தேர்வு எழுதிய 24 ஆயிரம் மாணவர்களுக்கும் ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் வீதம் 196 மதிப்பெண்களை சிபிஎஸ்இ நிர்வாகம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 


மத்திய அரசு கடந்த 2 ஆண்டுகளாக தமிழக மாணவர்களை வஞ்சித்து வருகிறது. கடந்த ஆண்டும் தேர்வு வினாத்தாள் சரிவர மொழி பெயர்க்கப்படவில்லை. இதுதொடர்பாக திருச்சியை சேர்ந்த 6 மாணவர்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஎஸ்இக்கு எதிராக தொடர்ந்த வழக்கு தற்போது, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு வேறு மாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்கி மன உளைச்சலை ஏற்படுத்தியது, 49 கேள்வி தவறாக மொழி பெயர்த்தது தமிழக மாணவர்களை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Comments