பள்ளிக் கல்விக்கான மத்திய அரசின் இரு திட்டங்கள் ஒருங்கிணைப்பு: அரசாணை வெளியீடு-434 பதவிகளை அரசிடம் சமர்ப்பிக்க அரசு உத்தரவு

பள்ளிக் கல்விக்கான மத்திய அரசின் இரு திட்டங்களை (எஸ்எஸ்ஏ-ஆர்எம்எஸ்ஏ) இணைத்து, ஒருங்கிணைந்த திட்டமாக செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறையின் முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:-
ஒன்று முதல் 8 -ஆம் வகுப்பு வரை படிக்கும் 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான தொடக்கக் கல்வியின் தரம் உயர்வு, மத்திய அரசின் சர்வ சிக்ஷா அபியான் (எஸ்எஸ்ஏ) திட்டம் மூலமாகவும் 9, 10 -ஆம் வகுப்புகளில் படிக்கும் 14 வயது முதல் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான இடைநிலைக் கல்வியின் மேம்பாடு, ராஷ்டிரிய மத்யமிக் சிக்ஷா அபியான்(ஆர்எம்எஸ்ஏ) திட்டம் மூலமாகவும் உறுதி செய்யப்பட்டு வருகிறது.
திறமையான நிர்வாகம், குறைவான செலவு போன்ற காரணங்களுக்காக இந்த இரண்டு திட்டங்களின் நிர்வாக அமைப்புகளை இணைக்கலாம் என, கடந்த 16.11.17 மற்றும் 3.4.18 ஆகிய தேதிகளில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை கடிதம் எழுதியது. அதில், 'இந்த இரண்டு திட்டங்களின் நிர்வாகத்தையும் ஒன்றாக இணைத்து, மாநிலத்தில் ஒரு முகமையின்கீழ் கொண்டு வந்து அமல்படுத்த வேண்டும்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து எஸ்எஸ்ஏ மாநில திட்ட இயக்குநர் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், 'இரண்டு திட்ட நிர்வாகத்தையும் இணைத்த பிறகு, அதை நிர்வகிப்பதற்காக அரசின் துணைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை கூடுதல் திட்ட இயக்குநராக நியமிக்கலாம்' என்று முன்மொழிந்துள்ளார்.
திட்ட நிர்வாகத்தை இணைத்த பிறகு மாநிலம், மாவட்டம், வட்டார அளவில் ஏற்படுத்தப்பட வேண்டிய நிர்வாக முறை குறித்தும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த இணைப்புக்குப் பிறகு அரசுக்கு திரும்ப சமர்ப்பிக்க வேண்டிய பதவிகளையும் அவர் பட்டியலிட்டுள்ளார். அவரது கடிதத்தை தமிழக அரசு கவனமுடன் பரிசீலித்தது. அதையடுத்து சர்வ சிக்ஷா அபியான், ராஷ்டிரிய மத்யமிக் சிக்ஷா அபியான் ஆகிய திட்ட நிர்வாகத்தை இணைத்து, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டமாக (சமக்கிரா சிக்ஷா அபியான்) அமல்படுத்த அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் பதவிகளை உருவாக்குவதற்கும் அரசு அனுமதி அளித்துள்ளது. அத்துடன் இணை இயக்குநர் மற்றும் 434 பதவிகளை அரசிடம் சமர்ப்பிக்கவும் சர்வ சிக்ஷா அபியானின் மாநிலத் திட்ட இயக்குநருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments