குழந்தைகளுக்காக 17,000 கி.மீட்டர் தூரம் நடக்கும் இன்ஜினீயர்!





'இந்தியாவில் பிச்சையெடுக்கும் குழந்தைகளை மீட்டெடுக்க, 17,000 கி.மீட்டர் தூரம் நடக்க இலக்கு நிர்ணயித்துளேன்' என்று இன்ஜினீயர் ஆஷிஷ் ஷர்மா தெரிவித்துள்ளார்.

சமோபூர் பட்லி நகரைச் சேர்ந்தவர் ஆஷிஷ் ஷர்மா. பி.டெக் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிப்பில் பட்டம் பெற்றுள்ளார். ஆதரவற்ற குழந்தைகள், இந்தியாவில் உள்ள சாலைகளிலும் வீதிகளிலும் பிச்சை எடுத்துவருகின்றனர். இதை மாற்ற வேண்டும் என முடிவுசெய்து நடைப்பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், `` 2014ல் படிப்பு முடித்தபின், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவந்தேன். அப்போது, ஒன்பது வயது சிறுமி ஒருவர், என்னிடம் பிச்சை கேட்டார். அந்த நிகழ்வுதான் என்னுடைய வாழ்வின் திருப்புமுனையாக மாறியது. சிறார்கள் சாலைகளில் பிச்சை எடுப்பது மிகவும் தவறு என்று மனதில் பட்டது. இதையடுத்து, நான் குடியிருந்த பகுதியில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ஏழு சிறுவர்களை மீட்டெடுத்தேன். இதேபோல இந்தியா முழுவதும், சாலைகளிலும் வீதிகளிலும் பிச்சை எடுத்து வரும் சிறுவர்களை மீட்டெடுக்க வேண்டும் என முடிவுசெய்தேன்.

இதனால், செய்துகொண்டிருந்த வேலையை உதறிவிட்டு, சிறுவர்களை மீட்டெடுக்க நடைபயணத்தைத் தொடங்க முடிவுசெய்தேன். 17, 000 கி.மீ தூரம் இலக்காக நிர்ணயித்தேன். உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து நடைப்பயணத்தைத் தொடங்கினேன். ஹிமாச்சலபிரதேசம், பஞ்சாப், ஹரியான, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, கோவா, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களைக் கடந்து, அலிகார் நகருக்கு வந்துள்ளேன். ஒரு நாளைக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை நடப்பேன். இதுவரை 5, 613 கி.மீட்டர் தூரம் கடந்துள்ளேன். மீதமுள்ள தூரத்தை நிச்சயம் கடப்பேன்.

மேலும், மாவட்ட அதிகாரிகள் மற்றும் பள்ளிகளின் தலைமைக் கல்வி அதிகாரிகளைச் சந்தித்து, பிச்சையெடுக்கும் குழந்தைகள்குறித்த விழிப்புஉணர்வை ஏற்படுத்துமாறு வலியுறுத்திவருகிறேன். அப்படி பிச்சை கேட்கும் குழந்தைகளுக்குப் பணம் கொடுக்காமல், பள்ளிக்குச் செல்ல வழிசெய்வோம் என்ற உறுதிமொழியை எடுத்துக்கொள்ளும்படி மாணவர்களிடம் கேட்டுக்கொள்வேன். பள்ளி நிர்வாகத்திடம் அனுமதிபெற்று, மாணவர்களிடம் விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசுவேன்'' என்றார்.

Comments