15,000 தமிழக மாணவர்கள் பரிதவிப்பு: நாளை நீட் தேர்வு எழுத முடியுமா என கலக்கம்...தமிழக அரசு சலுகைகள் அறிவிப்பு

நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாளை நடைபெறுகிறது. தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 15 ஆயிரம் பேருக்கு வெளிமாநில தேர்வு மையங்களை ஒதுக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால்,
தமிழக மாணவர்கள் மத்தியில் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வை நாடு முழுவதும்  கட்டாயமாக்கி 2016ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.  இந்த ஆண்டு நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்வதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நீட் தேர்வு கிடையாது என்பதால் பல மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கவில்லை. ஆனால் இந்த ஆண்டு கண்டிப்பாக நீட் தேர்வு நடைபெறும் என்பதால், விருப்பம் உள்ள அனைவருமே விண்ணப்பம் செய்தனர்.

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நாளை (6ம் தேதி) நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 476 மருத்துவக்கல்லூரிகளில், 60,990 இடங்கள் உள்ளன. இதற்காக 13 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் 2900 இடங்கள் உள்ளன. அதில் 1,07,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் சுமார் 15 ஆயிரம் பேருக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கேரளா, ஆந்திரா, தெலங்கானா, மகராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தேர்வு எழுத மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தை ஒட்டியுள்ள மாநிலங்களுக்கு ஒதுக்கியதையே மாணவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில், மகராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மையங்கள் ஒதுக்கியது பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 மாணவர்கள் ரயில்களில் ராஜஸ்தான் செல்ல வேண்டுமானால் 36 மணி நேரம் ஆகும். மேலும் உடனடியாக அவர்களுக்கு இருக்கையும் கிடைக்காது. முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில்தான் மாணவர்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அல்லது ஒரு ஆளுக்கு ரூ.18 ஆயிரம் செலவு செய்து விமானத்தில் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர் அல்லது மாணவிகள் தனியாக சென்று எழுத முடியாது. பெற்றோருடன் செல்ல வேண்டும். அப்படி சென்றால் பலருக்கும் செலவு அதிகமாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதைத் தவிர தங்கும் வசதி, வாகனச் செலவு என்று பல இன்னல்களுக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவ, மாணவிகளுக்கு அரசு உதவி செய்ய வேண்டும், வாகன வசதிகள், அதிகாரிகளை உடன் அனுப்புவது போன்ற பணிகளை உடனடியாக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வெளிமாநிலங்களில் தேர்வு ஒதுக்கியதற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட பல தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வெளி மாநிலத்திற்கு நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவ, மாணவியர்களுக்கும், அவர்களுடன் செல்லும் நபர் ஒருவருக்கும் பயணப் படியாக இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணமும், (பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு, இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணத்திற்கு மிகாமலும்), இதர செலவினங்களுக்காக மாணவர் ஒருவருக்கு தலா ரூ.1,000 வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இதை அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மூலமாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்து முன்பணமாகவே பெற்றுக் கொள்ளலாம் அல்லது தேர்வு எழுதி திரும்பிய பிறகும் பயணம் மேற்கொண்டதற்கான உரிய ரசீதுகளைக் கொடுத்து மேற்படி தொகையை பெற்றுக் கொள்ளலாம்.  முன்பணம் பெற்றவர்கள் தேர்வு எழுதி திரும்பிய பின், உரிய ரசீதுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் சமர்பிக்க வேண்டும். ஏதேனும் சிரமம் ஏற்படும்பட்சத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை தொடர்பு கொண்டோ அல்லது பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் கட்டணமில்லா தகவல் / ஆலோசனை மைய தொலைபேசி எண்ணான 14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டோ உரிய உதவிகளைப் பெறலாம்’’ என்று கூறியுள்ளார்.

அரசுப்பள்ளி மாணவர் 39 பேர் பாதிப்பு
தமிழகத்தில் 32 மாவட்டங்களை சேர்ந்த அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 39 பேருக்கு வெளி மாநிலத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் தாளவாடியை சேர்ந்த 4 பேரில் 3 பேருக்கு மைசூரிலும், ஒருவருக்கு பெங்களூருவிலும் மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி 10 மாணவர்களுக்கு திருவனந்த புரம், ராமநாதபுரம் 1 மாணவர் கேரளாவில் உள்ள எர்ணாகுளம், திருவாரூர் 2 மாணவர்களுக்கு கேரளாவில் உள்ள கொல்லம், திருநெல்வேலியை சேர்ந்த  5 பேருக்கு திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சி 17 மாணவர்களுக்கு திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வெளிமாநில மையம் ஏன்?
நீட் தேர்வு இயக்குனர் சன்யம் பரத்வாஜ், ‘‘கடந்த ஆண்டு 82 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்றனர். இந்த ஆண்டு 25 சதவீதம் கூடுதலாக இடங்கள் ஒதுக்க திட்டமிட்டுட்டோம். ஆனால் 31 சதவீதம் மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பித்தனர். தற்போதைய சூழலில் தமிழக நீட் தேர்வு மையங்களில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் மாணவர்களுக்கு தேர்வு நடத்த முடியும். தமிழகத்தை சேர்ந்த 5,371 மாணவர்கள் தங்களின் 2வது அல்லது 3வது விருப்ப தேர்வு மையமாக எர்ணாகுளத்தை தேர்வு செய்ததால், தமிழகத்தில் இடம் இல்லாத நிலையில் அவர்களுக்கு வேறு மாநிலங்களில் இடம் ஒதுக்கப்பட்டது’’ என்றார்.

வெளிமாநிலத்தில் தமிழ்மொழி கேள்வித்தாள் கிடைக்குமா?
நீட் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்த மாணவர்கள் ஆங்கிலம், இந்தி உள்பட 10 மொழிகளில் தேர்வு எழுதலாம். இந்த ஆண்டு உருது மொழியும் சேர்க்கப்பட்டுள்ளதால் 11 மொழிகளில் தேர்வு எழுத முடியும். அதனால், மாணவர்கள் எந்த மொழியை தேர்வு செய்துள்ளார்களோ அந்த மொழியில் தேர்வு எழுத முடியும். இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த மாணவ மாணவியர் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியை தேர்வு செய்துள்ளனர்.  வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு ஆங்கிலம், தமிழ் மொழியில் உள்ள கேள்வித்தாள் வழங்கப்படுமா என்ற சந்தேகம் மாணவர்கள் இடையே ஏற்பட்டுள்ளது.

குவியும் உதவிகள்
தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுத வெளி மாநிலங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு உதவ தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ராஜஸ்தான் தமிழ் சங்கம், அரசியல் கட்சிகள், மனித உரிமை ஆர்வலர்கள் முன்வந்துள்ளனர். அதில் கேரளா செல்லும் 5,371 மாணவர்களுக்கான உதவி எண்கள் வருமாறு:
1.திருவனந்தபுரம் தமிழ் சங்கம்
மோகனதாஸ்: 91 9447797910
கண்ணன்:91 9447722332
செந்திவேல்: 91 9995679166

2. கொல்லம் தமிழ் சங்கம்
விஜயராஜன்: 91 9447766980

3.புனலூர் தமிழ்சங்கம்
தனசேகரன்: 9447122016

4.சங்கனாச்சேரி திருவள்ளுவர் தமிழ் மன்றம்
வேணுகோபால்: 9447122678

5. கோட்டயம் தமிழ்க்காலை வளர்ச்சி மன்றம்
அபுபேக்கர்: 9846056662

6. கோழிக்கோடு தமிழ் சங்கம்
சோலையன்: 9495646085
பழனிவேலு: 9443671038

7. பாலக்கோடு தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம்
பேச்சுமுத்து: 9388197671

நீட் தேர்வு நடப்பதை அடுத்து  தமிழகத்தில் 170 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 49  மையங்களில் 33ஆயிரத்து 842 பேர் தேர்வு எழுதுகின்றனர். கடந்த ஆண்டு(2017) தமிழகத்தில் 82 ஆயிரத்து 272 மாணவ மாணவியர் நீட் தேர்வு எழுதினர். அவர்களுக்காக தமிழகத்தில் 149 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 10 சதவீதம் மாணவ மாணவியர் கூடுதலாக விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதாவது 90 ஆயிரம் பேரை எதிர்பார்த்து அனைத்து ஏற்பாடுகளையும் சிபிஎஸ்இ செய்து வந்தது. இதையடுத்து தமிழகத்தில் 170 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் 1 லட்சத்து 7 ஆ்யிரத்து 480 பேர் தேர்வு எழுத முடியும்.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு நீட் எழுத விண்ணப்பித்த மாணவர்களில் கூடுதலாக 25 ஆயிரத்து 206 பேருக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டுக்கான தேர்வில் 30 சதவீதம் மாணவர்களுக்கு தாங்கள் விரும்பிய இடங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.

7.30 மணிக்கே தேர்வு மையத்தில் இருக்க வேண்டும்
நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். முதல் பிரிவில் உள்ளவர்கள் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரைக்கும், இரண்டாவது பிரிவில் உள்ளவர்கள் காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரையும் தேர்வு எழுதும் அறைக்கு வர வேண்டும். இதுதொடர்பாக  நீட்டுக்கான  ஹால்டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டது.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்