10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவை இன்டர்நெட்டில் வெளியிட கூடாது : ஐகோர்ட்டில் பொதுநலன் வழக்கு
பொதுத்தேர்வுகளான 10, 11, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை இணையதளத்தில் வெளியிட தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த செந்தில்குமார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: அரசு பொது தேர்வுகளின் முடிவுகளை நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், இணையதளங்களில் தேர்வுத்துறை வெளியிடுகிறது.
இதைப் பார்த்தவுடன் தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் தவறான முடிவுக்கு செல்கிறார்கள். தேர்வில் தோல்வியடையும் மாணவர்களும், குறைவான மதிப்பெண்களைப் பெறும் மாணவர்களும் தற்கொலை முடிவுக்கு தள்ளப்படுகிறார்கள். கடந்த காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
எனவே, இதுபோன்ற தவறான முடிவுகளைத் தடுக்க, தேர்வு முடிவுகளை மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் தெரிவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து கடிதம் எழுதினேன்.
ஏப்ரல் 14ம் தேதி பள்ளி கல்விதுறையிடம் மனு கொடுத்தேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதுகுறித்து தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விடுமுறைகால நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
Comments
Post a Comment