1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடப் புத்தகங்கள் விரைவில் விற்பனை: தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் தகவல்

தமிழகத்தில் 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கானமாற்றியமைக்கப்பட்ட புதிய பாடப் புத்தகங்கள் இம்மாத இறுதியில் விற்பனைக்கு கிடைக்கும் என்று தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குநர் டி.ஜெகந்நாதன் தெரி வித்தார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:தமிழக பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் புதிய பாடத்திட்டம் படிப்படியாக மாற்றியமைக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக நடப்பு ஆண்டில் 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இந்த வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.புதிய பாடப்புத்தகங்கள் மே இறுதியில் விற்பனைக்கு கிடைக்கும்.மற்ற வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் தமிழ்நாடு பாடநூல் கழக விற்பனை மையங்களிலும் ஆன்லைன் மூலமும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தனியார் பள்ளிகள் தங்களுக்கு தேவைப்படும் புத்தகங்களை ஆன்லைனில் பதிவு செய்து அதற்கான கட்டணத்தையும் ஆன்லைனிலேயே செலுத்தி தங்களுக்கு அருகேயுள்ள பாடநூல் கழக மண்டல அலுவலகங்களில் மொத்தமாக பெற்றுக்கொள்ளலாம். மாணவர்கள் தனியாகவும் ஆன்லைனில் பதிவுசெய்து தங்களுக்குரிய பாடப் புத்தகங்களை பெற்றுக்கொள்ளலாம்.

சிபிஎஸ்இ மாணவர்களுக்கும் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கான தமிழ்ப் புத்தகமே வழங்கப்படுகிறது. அதனால், சிபிஎஸ்இ மாணவர்களுக்கான தமிழ்ப் புத்தகங்களும் பாடநூல் கழகம் மூலமே விற்பனைசெய்யப்பட்டு வருகிறது. மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு முப்பருவ முறை நடைமுறையில் இருப்பதால் ஓராண்டுக்கான தமிழ்ப் பாடங்கள் மூன்று தொகுப்பாக பிரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. சிபிஎஸ்இ-யில் முப்பருவ முறை கிடையாது என்பதால் அந்த மாணவர்களுக்கான தமிழ்ப் புத்தகங்கள் மட்டும் ஒரே தொகுப்பாக அச்சடித்து வழங்கப்படுகின்றன. சிபிஎஸ்இ-யில் 1 மற்றும்9-ம் வகுப்பு தவிர மற்ற வகுப்புகளுக்கான தமிழ் பாடப்புத்தகங்கள் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.தமிழகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட புத்தக விற்பனையகங்களிலும் விற்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பாடப்புத்தகத்திலும் அதன் விலை அச்சடிக்கப்பட்டுள்ளது. அதைவிட அதிக விலைக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட விற்பனையகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஜெகந்நாதன் கூறினார்.

பாடநூல் கழக நூலகம்

சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள ஈவிகே சம்பத்மாளிகை கட்டிடத்தின் தரைதளத்தில் தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் சிறப்பு நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு பாடநூல் கழகம், கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிட்டு வந்தது. மொழி, இலக்கியம், அரசியல், வரலாறு, புவியியல், உளவியல், தத்துவம், தொழில்நுட்பம், மருத்துவம், விவசாயம் என பல்வேறு துறைகளில் தமிழில் பதிப்பிக்கப்பட்ட புத்தகங்கள் தற்போது அரிய புத்தகங்கள் ஆகிவிட்டன. அந்த அரிய புத்தகங்கள் மறுமதிப்பு செய்யப்பட்டு புதிதாக அமைக்கப்படும் நூலகத்தில் வாசகர்கள் படிப்பதற்காக வைக்கப்பட உள்ளன.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்