திருப்பதியில் இனி தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட ( டைம் ஸ்லாட்) அட்டை வழங்கப்படும்


திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் சாதாரண பக்தர்களுக்கு திருமலை, திருப்பதியில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை வழங்கப்பட உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் சுலபமாக தரிசனம் செய்ய தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை (டைம் ஸ்லாட்) வழங்கப்பட உள்ளது. மார்ச் மாதம் 2-வது வாரத்தில் இருந்து இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான கவுண்ட்டர்கள் அமைக்கும் பணி ரூ.3 கோடி செலவில் நடந்து வருகிறது. அந்தப் பணி இன்னும் முடியாத நிலையில் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்பின் வருகிற 10-ந் தேதிக்குள் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை வழங்கும் பணி அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகளில் கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை, கட்டிடத்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட அதிகாரிகளும், ஊழியர்களும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். 2013-ம் ஆண்டு 300 ரூபாய் டிக்கெட் 'டைம் ஸ்லாட்' முறையில் வழங்கப்பட்டது. அதேபோல் 2017-ம் ஆண்டு அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய நடைபாதைகளில் வரும் திவ்ய தரிசன பக்தர்களுக்கு 'டைம் ஸ்லாட்' முறையில் தரிசன அனுமதி சீட்டு வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை பரிசோதனை அடிப்படையில் இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு 'டைம் ஸ்லாட்' முறையில் தரிசன அனுமதி அட்டை வழங்கப்பட்டது. இந்தத் திட்டம் வெற்றி பெற்றதால், 'டைம் ஸ்லாட்' முறையில் ஏழுமலையானை தரிசிக்க அனுமதி அட்டை வழங்கும் பணியை வருகிற 10-ந் தேதிக்குள் அமல்படுத்த திட்டமிட்டுள்ளனர். அதற்காக திருமலையிலும், திருப்பதியிலும் கவுண்ட்டர்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தக் கவுண்ட்டர்களில் பக்தர்கள் அமர்ந்து செல்ல வசதியாக இருக்கைகள், மின் விசிறிகள், கழிப்பறைகள் அமைக்கப்படுகின்றன. இலவச தரிசனத்தில் முதியோர் பலர் செல்கிறார்கள். முதியோருக்காக மாதத்தில் இரு முறை சிறப்பு தரிசன அனுமதி வழங்கப்படுகிறது. சிறப்பு தரிசனத்தில் செல்ல முடியாதவர்கள் இலவச தரிசனத்தில் சென்று 'டைம் ஸ்லாட்' தரிசன அனுமதி அட்டையை பெற வசதியாக அவர்களுக்கென தனிக் கவுண்ட்டர்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. 'டைம் ஸ்லாட்' முறையிலான தரிசன அனுமதி அட்டை பெற வரும் அனைத்துத் தரப்பு பக்தர்கள் ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஏதேனும் ஒன்றை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். ஒரு முறை 'டைம் ஸ்லாட்' அனுமதி அட்டையை பெற்ற ஒரு பக்தர் 15 நாட்களுக்குள் மீண்டும் 'டைம் ஸ்லாட்' அட்டையை பெற முடியாது. அத்துடன் சாமி தரிசனமும் செய்ய முடியாது. அதற்காக கம்ப்யூட்டரில் புதிய மென் பொருள் பொருத்தப்பட்டு உள்ளது. அவர்கள் 15 நாட்களுக்கு பிறகு மீண்டும் வந்து சாமி தரிசனம் செய்யலாம். மேலும் திவ்ய தரிசனம், 300 ரூபாய் டிக்கெட் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, இலவச தரிசனத்தில் சென்று வழிபட முடியாது. அவர்களுக்கும் 'டைம் ஸ்லாட்' முறையிலான தரிசன அனுமதி அட்டை வழங்க முடியாத அளவுக்கு கம்ப்யூட்டரில் புதிய மென் பொருள் பொருத்தப்பட்டு உள்ளது. இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் ஆதார் அட்டையோ அல்லது வாக்காளர் அடையாள அட்டையோ இல்லை என்றால் கவலைப்பட தேவையில்லை. வழக்கம்போல் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் தங்கி ஓய்வெடுத்து இலவச தரிசனத்தில் சென்று ஏழுமலையானை வழிபடலாம் என திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்

Google Maps! Latest Update for Bikers!