அனைத்து தரப்பினரும் வியக்கும் வகையில் மிக உயர்ந்த தரத்தில் தமிழக பள்ளிக் கல்வியின் புதிய பாடத்திட்டம்- சென்னையில் நடந்த கருத்தரங்கில் கல்வியாளர்கள் கருத்து

தமிழக பள்ளிக் கல்வித் துறை உருவாக்கியுள்ளது மிக உயர்ந்த தரத்திலான பாடத் திட்டம்: சென்னையில் நடந்த கருத்தரங்கில் கல்வியாளர்கள் கருத்து


அனைத்து தரப்பினரும் வியக்கும் வகையில் மிக உயர்ந்த தரத்தில் தமிழக பள்ளிக் கல்வியின் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

தமிழ்நாடு மாணவர், பெற்றோர் நலச் சங்கம் சார்பில் ‘தமிழ்நாடு பள்ளிக்கல்வி திட்ட உருவாக்கம்’ என்ற தலைப்பில் மாநில அளவிலான சிறப்புக் கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் க.அறிவொளி பேசியதாவது: பள்ளிக்கல்வித் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் எந்த தலையீடும் இல்லாமல் சுதந்திரமாக புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு அளித்து வருகிறது. மதிப்பெண்கள் பிரதானப்படுத்தப்படுவதால், அதிக மதிப்பெண்கள் பெறுவதற்காக பாடத் திட்டத்தில் குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் மாணவர்கள் படிக்கின்றனர். மற்றவற்றை தவிர்த்துவிடுகின்றனர். ஆழமாக, முழுமையாக மாணவர்கள் எதையும் கற்றுக்கொள்வதில்லை. எனவே, அனைத்தையும் மாணவர்கள் கற்க வேண்டும் என்ற அடிப்படையில் புளூபிரின்ட் அளிக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. தொழிற்கல்வி பயிலும் மாணவர்கள் தொழிற்சாலைகளுக்கு நேரடியாக சென்று பயிற்சி பெறும் வகையில் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பாடங்களுக்கு நடுவில் அந்த பாடத்துடன் தொடர்புடைய சுவாரஸ்ய தகவல்களும் பெட்டிச் செய்திகளாக இடம்பெறும். மேலும், அறிவியல் பாடங்களில் வாழ்க்கையோடு தொடர்புடையவற்றை எடுத்துக்காட்டுகளாக குறிப்பிட்டுள்ளோம். பாடத்துக்கும் நடைமுறைக்குமான இடைவெளி முடிந்த அளவு குறைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் பக்க வடிவமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடத்துக்கும் QR Code அளிக்கப்பட்டுள்ளது. அதை ஸ்கேன் செய்து பார்த்தால் அந்த பாடத்தின் விளக்கத்தை ஆசிரியர் ஒருவர் வீடியோவில் விளக்குவார். பாடத் திட்டத்தை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து விளக்குவதற்காக முதல்முறையாக ஆசிரியர் வழிகாட்டு கையேடும் தயாராகி வருகிறது. பாடங்களை புதுமையாக நடத்தும் ஆசிரியர்களை ஊக்குவிக்கவும், அவர்கள் மூலம் மற்றவர்கள் பயன்பெறும் வகையிலும் ஆசிரியர்கள் தங்கள் வீடியோக்களை பதிவேற்றம் செய்வதற்கான தளமும் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய பாடத்திட்டம் குறித்து ஒவ்வொரு ஆசிரியருக்கும் பயிற்சி அளிக்க உள்ளோம். இவ்வாறு அறிவொளி பேசினார்.

பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசும்போது, “சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைவிட தமிழக பாடத்திட்டத்தின் தரம் குறைவாக உள்ளது என்று கூறி வந்தனர். தற்போது தமிழக அரசால் தயாரிக்கப்பட்டுள்ள பாடத்திட்டம், தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஆர்டி) தயாரிக்கும் பாடத்திட்டத்தைவிட அதிக தரத்தில் உள்ளது” என்றார். கருத்தரங்கில் தமிழ்நாடு மாணவர், பெற்றோர் நலச் சங்கத்தின் தலைவர் செ.அருமைநாதன், துணைத் தலைவர் ஜி.ராமலிங்கம், பொதுச்செயலாளர் நா.வீரபெருமாள், பொருளாளர் ச.ஜாகிர் உசேன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்

Google Maps! Latest Update for Bikers!