ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை எந்தெந்த பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன?: பள்ளிகள் சங்கம் பதிலளிக்க உத்தரவு

ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை எந்தெந்தபாடங்கள் கற்பிக்கப்படுகின்றன என்பது குறித்து சிபிஎஸ்இ தனியார் பள்ளிகள் சங்கம் பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, வழக்குரைஞர் புருஷோத்தமன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) பாடத்திட்டத்தின்படி முதல் வகுப்பில் மூன்று பாடங்கள் மட்டுமே பயிற்றுவிக்கப்படுகின்றன. ஆனால், சிபிஎஸ்இ பாடத் திட்டத்தைப் பின்பற்றும் தனியார் பள்ளிகள் முதல் வகுப்பில் எட்டுப் பாடங்களை பயிற்றுவிக்கின்றன. இதனால், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே, என்சிஇஆர்டி விநியோகிக்கும் புத்தகங்களை மட்டும் பள்ளிகள் பயன்படுத்த சிபிஎஸ்இ நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த மனு தொடர்பாக மத்திய அரசு, என்சிஇஆர்டி மற்றும் சிபிஎஸ்இ பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, என்சிஇஆர்டி செயலாளர் மேஜர் ஹர்ஷ் குமார் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், 'ஒரு குழந்தை எவ்வளவு நேரம் படிக்க வேண்டும், ஆரம்பக் கல்வி நிலையில் அவர்களுக்கு எவ்வளவு நேரம் பாடம் கற்பிக்க வேண்டும் என்பதை வரையறுத்துத்தான் பாடத் திட்டம் உருவாக்கப்படுகிறது. மேலும் புத்தகச் சுமையைக் குறைக்க முதல் மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கு மொழிப் பாடம் மற்றும் கணிதம் ஆகிய இரண்டு பாடங்களையும், மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மொழிப் பாடம், சூழ்நிலையியல் மற்றும் கணிதம் ஆகிய 3 பாடங்களை மட்டுமே கற்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இவை தவிர பொது அறிவு பாடமும் கொடுக்கப்பட்டுள்ளது. என்சிஇஆர்டி ஒருபோதும் அதிகமான பாடங்களைக் கற்பிக்க வேண்டுமென வற்புறுத்தவில்லை' என அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை எந்தெந்தப் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன, அந்த வகுப்புகளுக்கான பாடத் திட்டம் என்ன என்பது குறித்து சிபிஎஸ்இ தனியார் பள்ளிகள் சங்கம் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை வரும் 24 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்

Google Maps! Latest Update for Bikers!