ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வுமுடிவுகள் இன்று வெளியீடு

மத்திய அரசு உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத்
தேர்வு (ஜே.இ.இ.- முதல்நிலை) முடிவுகள் திங்கள்கிழமை (ஏப்.30) வெளியிடப்பட உள்ளன.



ஜே.இ.இ. தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதலில் முதல்நிலைத் தேர்வு, பின்னர் முதன்மைத் தேர்வு (அட்வான்ஸ்டு) நடத்தப்படும். முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் என்.ஐ.டி., ஐஐஐடி போன்ற மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற முடியும். அதோடு, முதல்நிலை தேர்வில் தகுதி பெறுபவர்களில் முதல் 2 லட்சம் பேர், அடுத்து நடத்தப்படும் ஜே.இ.இ. முதன்மைத் தேர்வில் பங்கேற்கும் தகுதியைப் பெறுவர். முதன்மைத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் நாடு முழுவதும் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற முடியும்.
இதில் முதல்நிலைத் தேர்வில் பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான தாள்-1-ன் நேரடி எழுத்துத்தேர்வு ஏப்ரல் 8-ஆம் தேதி நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதற்கான ஆன்-லைன் தேர்வு ஏப்ரல் 15,16 தேதிகளில் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வுக்கான முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட உள்ளன. முடிவுகளை ஜே.இ.இ. இணையதளத்தில் (www.jeemain.nic.in) பார்த்து தெரிந்துகொள்ளலாம். இதில், பி.ஆர்க். படிப்புக்கான தாள்-2 தேர்வு முடிவுகள் மே 31 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளன.
மே 20-இல் முதன்மைத் தேர்வு: ஜே.இ.இ. முதன்மைத் தேர்வானது மே 20 இல் நடத்தப்பட உள்ளது. இந்த ஆன்-லைன் தேர்வை ஐஐடி கான்பூர் நடத்துகிறது. இதற்குரிய விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான ஆன்-லைன் பதிவு மே 2 ஆம் தேதி தொடங்கி, மே 7 ஆம் தேதியுடன் முடிவடைந்து விடும்.

Comments