கல்வி கடன் பாக்கிக்காக பாஸ்போர்ட்டை முடக்க முடியாது - உயர்நீதி மன்றம்.

நெல்லை மாவட்டம், மானூரை சேர்ந்த ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நானும், என் தம்பியும் மானூர் கிளை அரசு  வங்கியில் கல்வி கடன் பெற்றிருந்தோம்.

இந்த கடனை முறையாக செலுத்தவில்லையென கூறி, எங்கள் வீட்டை ஏலம் விடும் நடவடிக்கையில் வங்கி  ஈடுபட்டது. இதுகுறித்து கடன் வசூல் தீர்ப்பாயத்தில் இடைக்கால தடை உத்தரவு பெற்றுள்ளோம். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போது எனக்கு  பணி கிடைத்துள்ளது. நான் மாதந்தோறும் முறையாக கடனை செலுத்தி வருகிறேன். இதனிடையே, எனது பாஸ்போர்ட்டை முடக்கக் கோரி மதுரை  மண்டல அலுவலகத்திற்கு வங்கி தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வங்கிக்கு அதிகாரம் இல்லை. எனவே,  வங்கி அதிகாரியின் நடவடிக்கையை ரத்து ெசய்ய வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி வி.பாரதிதாசன் விசாரித்தார். அப்போது மனுதாரர் தரப்பில், பாஸ்போர்ட் சட்டத்தின் 10வது பிரிவின்படி இதுபோன்ற நடவடிக்கைகளில் வங்கி ஈடுபட முடியாது என கூறப்பட்டது. வங்கி தரப்பில், வங்கிக்கு நிலுவை பாக்கியாக ரூ.12 லட்சத்து 86 ஆயிரத்து 516 செலுத்த வேண்டும். மனுதாரர் சிங்கப்பூரில் பணியாற்றுகிறார். இவரது  சகோதரர் ரயில்வேயில் பணியாற்றுகிறார். ஆனாலும் கடன் நிலுவையில் உள்ளது என கூறப்பட்டது.  மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல்  தரப்பில், வங்கி அதிகாரியிடமிருந்து இதுபோன்ற எந்த வேண்டுகோளும் இதுவரை பெறப்படவில்லை. ஒருவேளை கிடைத்தாலும், முறையாக மனுதாரர்  தரப்புக்கு நோட்டீஸ் கொடுத்த பிறகே எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்றார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: வாராக்கடன் வசூலிப்பதில் குறை இருந்தால் வேறு வகையில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கடன் வசூல் தீர்ப்பாயத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது பாஸ்போர்ட்டை முடக்குவதற்கு எந்த முகாந்திரமும் கிடையாது. எனவே,  இதுதொடர்பான வங்கி அதிகாரியின் நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Comments