ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி
கலசபாக்கம் அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். இதனால், அந்தக் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எம்.எல்.ஏ. பாராட்டினார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட சீட்டம்பட்டு ஊராட்சி சின்னகல்லந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சையப்பன், ஆடு மேய்க்கும் கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி குமாரி. இவர்களுக்கு பி.யுவராஜ் (வயது 22) என்ற மகனும் செண்பகவள்ளி என்ற மகளும் உள்ளனர்.
யுவராஜ் 1-ம் வகுப்பு முதல், 5-ம் வகுப்பு வரை சீட்டம்பட்டு அரசு ஆரம்ப பள்ளியிலும், 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஆர்ப்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளியிலும் படித்தார். அவர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 418 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வரை மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து விட்டு, திருவண்ணாமலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இ.சி.இ. படித்துவிட்டு, ஓராண்டாக ஐ.ஏ.எஸ்.தேர்வுக்குப் படித்து வந்தார். தற்போது அவர் ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று திருவண்ணாமலை மாவட்டத்துக்கும், பிறந்த கிராமத்துக்கும் பெருமைத் தேடி கொடுத்துள்ளார்.
ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற யுவராஜ் நிருபர்களிடம் கூறியதாவது.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த நான், சிறுவயது முதலே படிப்பில் மிகவும் கவனம் செலுத்தி வந்தேன். அரசு பள்ளிக்கூடத்தில் படித்து, தேர்ச்சி பெற்று திருவண்ணாமலை எஸ்.கே.பி.பொறியியல் கல்லூரியில் பி.இ. படித்துக்கொண்டு இருக்கும்போது, அங்குள்ள பேராசிரியர்கள் ஐ.ஏ.எஸ். படிக்க ஊக்கப்படுத்தினர்.
அதன்படி சகாயம், இறையன்பு போன்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை முன்னுதாரணமாக மனதில் நினைத்து படித்து வந்தேன். முதலில் சென்னையில் உள்ள மனித நேய மையத்தில் 2 மாதம் படித்தேன். நான் பிளஸ்-2 படிக்கும்போது, அரசு சார்பில் வழங்கிய மடிக்கணினியை வைத்து இணையதள வசதியுடன் படித்துத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளேன். நான் மாநிலத்தில் முதல் இடம் வரவேண்டும் என எதிர்பார்த்தேன். ஆனால், 74-வது இடம் பெற்றுள்ளேன்.
நான் ஐ.ஏ.எஸ். பயிற்சி முடித்த பின்னர், என்னை பொதுப்பணி துறை செயலாளராக நியமித்தால், கிராமப்புறங்களில் உள்ள ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர் வார நடவடிக்கை எடுப்பதுடன் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 510 குளங்கள் காணாமல்போய் உள்ளதை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுப்பேன். எனது சொந்த கிராமத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் நூலகம் அமைத்து என்னை போன்ற மாணவர்கள் அதிக புத்தகங்களை படித்து அரசு தேர்வுகளில் வெற்றி பெற ஊக்குவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற யுவராஜை கலசபாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம், அவருடைய வீட்டுக்கு நேரடியாக சென்று இனிப்பு வழங்கி சால்வை அணிவித்து பாராட்டினார். குடிசை வீட்டில் வாழும் யுவராஜீக்கு உடனடியாக பசுமை வீடு கட்டித்தரப்படும். அவருக்கு, டெல்லி சென்று பயிற்சி பெற தேவையான நிதி உதவிகள் வழங்கப்படும், என்றார்.
https://www.vikatan.com/news/tamilnadu/147427-fake-ias-officer-arrested-by-trichy-police.html
ReplyDelete