விடைத்தாள் முறைகேடு புதிய கமிட்டியால் சர்ச்சை

விடைத்தாள் விற்பனை முறைகேட்டில் தொடர்புடைய, பாரதியார் பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், நாளை ஓய்வு பெறவுள்ள நிலையில்,
இந்த முறைகேடு தொடர்பான விசாரணைக்காக,
புதிய கமிட்டி அமைத்திருப்பது, சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கோவை, பாரதியார் பல்கலையில், மாணவர்கள் தேர்வு எழுதும் விடைத்தாள்கள், டன் கணக்கில் சேரும்போது, அவை முறைப்படி, ஏலம் விடப்படுவது வழக்கம். கடந்த, 2015ல்,150 டன் விடைத்தாள், முறைகேடாக விற்பனை செய்யப்பட்டதாக புகார் கிளம்பியது. இதில், பல்கலை நிர்வாகத்துக்கு, 17 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது.முறைகேடு தொடர்பாக, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், கிளாடியஸ் லீமா ரோஸ் மற்றும் இரண்டு அலுவலக பணியாளர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு, மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டனர். அப்போது, துணைவேந்தராக இருந்த ஜேம்ஸ் பிச்சை உத்தரவின்படி, இந்த முறைகேடு தொடர்பாக விசாரிப்பதற்கு, விசாரணை கமிட்டி அமைக்கப் பட்டது. இதன்பின், மூன்றாண்டுகளில், நான்கு கமிட்டிகள் அமைக்கப்பட்டன. ஆனால், விசாரணை விபரங்கள் வெளியிடப்படவில்லை.இந்நிலையில், கிளாடியஸ் லீமா ரோஸ்பணிக்காலம், நாளையுடன் முடிவடைகிறது. முறைகேட்டில் முக்கிய தொடர்புடைய அலுவலர் மீது எந்த நடவடிக்கையும்எடுக்காமலிருப்பது, பல்கலை பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில், கண் துடைப்புக்காக, மீண்டும் புதிய கமிட்டி ஒன்றை அமைத்து, விசாரணையை துவக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கமிட்டிகள் அமைத்தே, காலத்தை நகர்த்துவது, இந்த முறைகேட்டை மூடி மறைப்பதற்கான முயற்சி என, பல தரப்பிலும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பல்கலை ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் திருநாவுக்கரசு கூறுகையில், ''தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், கிளாடியஸ் லீமா ரோஸ், பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ''விடைத்தாள் விற்பனை தொடர்பாக, அவருக்கு சார்ஜ் மெமோ வழங்கி, ஓய்வூதிய, பணிக்கால பணப்பலன்கள் அனைத்தையும் நிறுத்தி வைத்துள்ளோம். பழைய கமிட்டியின் அறிக்கையில் திருப்தி இல்லாததால், புதிய கமிட்டியை அமைத்துள்ளோம்,'' என்றார்.

Comments

Popular Posts

Google Maps! Latest Update for Bikers!