தொடக்க கல்வித்துறையில் கோப்புகள் தேக்கம்:பணப்பலன் கிடைக்காமல் அதிருப்தி

மதுரை மாவட்ட தொடக்க கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பணிவரன்முறை உட்பட பல்வேறு வகையானகோப்புகள் மாதக்கணக்கில் தேங்கிக் கிடக்கிறது.

இம்மாவட்டத்தில் இத்துறையின் கீழ் 1500 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 4 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். பதவி உயர்வு பெற்ற ஆசிரியரின் பணி வரன்முறை, 10 ஆண்டுகள் பணி நிறைவு செய்தோருக்கு தேர்வு நிலை, 20 ஆண்டுகள் பணி நிறைவு செய்தோருக்கு சிறப்பு நிலை, ஊக்க ஊதியம், உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் நியமனத்திற்கானஅனுமதி உட்பட நுாற்றுக்கணக்கான கோப்புகள் மாதக் கணக்கில் தேங்கியுள்ளன. இதனால் பணப் பலன் தொடர்பான பல்வேறு பாதிப்புகள் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களில் நடக்கும் குறைதீர் கூட்டங்களில் ஆசிரியர்கள் அளிக்கும் மனுக்கள் மீதான நடவடிக்கையும் முடங்கியுள்ளன.

ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: கோப்புகள் தேங்குவதால் ஏழாவது சம்பளக் குழு பணப் பலன்கள் ஆசிரியர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. கள்ளிக்குடி யூனியனில் 13 நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் பழைய நிலையில் சம்பளம் பெறுகின்றனர்.

பதவி உயர்வு பெற்றோருக்கு இரு ஆண்டுகளில் பணிவரன்முறை செய்யப்பட வேண்டும். அதுதொடர்பாக 800 ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்துறையிலுள்ள உயர் அதிகாரி ஒருவர் மே மாதம் ஓய்வு பெறவுள்ளதால் கோப்புகளில் கையெழுத்திட தயங்குகிறார், என்றனர்.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்