ஏ.டி.எம்.களில் ஒரு முறை பணம் எடுத்தாலே கட்டணம்?

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் (தமிழ்நாடு) தலைவர் தி.தமிழரசு, பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன் ஆகியோர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-





பாரத ஸ்டேட் வங்கி கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் மார்ச் 2017-ம் ஆண்டு வரை குறைந்தபட்ச இருப்பு கட்டணம் வசூலிப்பதில்லை. அதே போல் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பல வங்கிகள் காசோலை புத்தக கட்டணம் வசூலிப்பதில்லை. மேலும், ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கும்போது மாதத்தில் 3 முறையிலிருந்து 5 முறை வரை கட்டணம் வசூலிப்பதில்லை.


கடந்த 2012 லிருந்து இப்படி வசூலிக்காத சேவை கட்டணத்திற்கு சேவை வரியும், அதற்கு 18 சதவீத வட்டியும், 100 சதவீதம் அபராதமும் சேர்த்து தற்போது செலுத்த வேண்டும் என்று அனைத்து வங்கிகளுக்கும் சரக்கு மற்றும் சேவை வரியின் உயர்மட்ட அலுவலகமான டைரக்டர் ஜெனரல் அலுவலகம் கடிதம் அனுப்பியுள்ளது.


இது இந்திய பொருளாதாரத்தில் பல பாதிப்புகளை உருவாக்கும். மத்திய நிதி அமைச்சகத்தின் இந்த வாடிக்கையாளர் விரோத நடவடிக்கையை இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறது. இந்த கடிதத்தை காரணம் காட்டி அனைத்து இலவச சேவைகளும் ரத்து செய்யப்படக்கூடிய ஆபத்தும் உள்ளதாக தெரிகிறது. உதாரணமாக ஏ.டி.எம்.களில் ஒரு முறை பணம் எடுத்தாலே கட்டணம் வசூலிப்பதற்கு வங்கி நிர்வாகங்கள் ஆலோசிப்பதாக செய்திகள் வருகின்றன.


மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும், வங்கி நிர்வாகங்களும் சாதாரண வாடிக்கையாளர்கள் மீது இத்தகைய சுமையை ஏற்றக்கூடாது. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வங்கிகளில் தொடர்ந்து சேவை பெறும் வகையில் வங்கிக் கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும்.


இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். 

Comments