8-ம் வகுப்பு வரை ஆன்லைன் தேர்வு முறை : பள்ளிக்கல்வித்துறை புதிய முயற்சி

8ம் வகுப்பு வரை ஆன்லைன் தேர்வு முறையை நடைமுறைப்படுத்த பள்ளிக்கல்வித்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது.


தமிழக பள்ளிக்கல்வித்துறையில் வரும் கல்வி ஆண்டில் முதல் வகுப்பு, 6ம் வகுப்பு, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இவற்றில் பிளஸ் 1 தவிர மற்ற வகுப்புகளுக்கு முதல் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு, மாவட்டவாரியாக பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு அன்றைய தினமே பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு முறையை நடைமுறைப்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இப்புதிய முயற்சியை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை புதிய பாடத்திட்டங்களை வடிவமைத்தக்குழுவே தயாரித்து வழங்கியுள்ளது. அதன்படி ஆன்லைன் தேர்வுமுறைக்கு ஏற்ப புதிய பாடப்புத்தகங்களில் கேள்விகளும் இணைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து வரும் கல்வி ஆண்டில் முதல்கட்டமாக 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வுமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதற்கேற்ப தமிழக அரசுப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் முழுமையாக தொடங்கிய பின்னர் தொடக்கப்பள்ளியில் அனைத்து வகுப்புகளுக்கும் ஆன்லைன் தேர்வுமுறை நடைமுறைப்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments