இஸ்ரோவை பார்வையிடும் வாய்ப்பு!’ - கும்பகோணம் பள்ளி மாணவர்கள் 75 பேர் தேர்வு
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இயங்கி வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவை பார்வையிடப் பள்ளி மாணவர்கள் அனைவரையும் அனுமதித்தால் விண்வெளி துறையில் இவர்களுக்கு ஆர்வம் உருவாகும் எனக் கல்வியாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.
உலக அளவில் முதன்மையான இடம் வகிக்கும் விண்வெளி ஆராய்ச்சி நிலையங்களில் இஸ்ரோ ஆறாவது இடம் வகிக்கிறது. பெரும் சவாலான பல செயற்கை கோள்களை விண்ணில் பாய்ச்சி சாதனைகள் படைத்து வருகிறது. இங்கு விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்பட 15 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பணியாற்றுகிறார்கள்.
இதனை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற பெரும்பாலான மாணவர்களின் கனவாக உள்ளது. இந்நிலையில்தான் கும்பகோணத்தில் உள்ள அரசு உதவிப் பெறும் பள்ளி பயிலும் 75 மாணவர்களுக்கு இஸ்ரோவை பார்வையிடுவதற்கான அரிய வாய்ப்பு உருவாகியுள்ளது. அரசு உதவிப்பெறும் பள்ளிகளின் 8 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அறிவியல் திறன் சார்ந்த புதுமை படைப்புகளுக்கான கண்காட்சி கடந்த ஜனவரி மாதம் கும்பகோணத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்டது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 75 மாணவர்களுக்கு இஸ்ரோவை நேரில் பார்வையிடுவதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய கல்வியாளர்கள் ‘’இது மிகவும் பாராட்டுக்குரியது. ஆனால் இதோடு நின்றுவிடக்கூடாது. தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவர்கள் அனைவரும் இஸ்ரோவை பார்வையிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இதனால் மாணவர்களுக்கு விண்வெளி ஆராய்ச்சித்துறையில் ஆர்வமும் ஆரம்பநிலை புரிதலும் ஏற்படும், இதனால் இத்துறையில் அதிக எண்ணிக்கையில் விஞ்ஞானிகள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.” என்கிறார்கள்.
Comments
Post a Comment