இணையதள வீடியோ, 'பார்கோடு'டன் பிளஸ் 1 புது பாட புத்தகம், 'பளிச்'

புதிய பாடத் திட்டத்தில், பிளஸ் 1 புத்தகம், கறுப்பு - வெள்ளையில் இருந்து, வண்ணமயமாக
மாறியுள்ளது.புத்தகங்களின் வடிவம் மாற்றப்பட்டதுடன், பாடம் தொடர்பான, இணையதள வீடியோ இணைப்பும் குறிப்பிடப்பட்டுள்ளது.தமிழக அரசு, 13 ஆண்டு களுக்கு பின், பாடத் திட்டத்தில் மாற்றம் செய்துள்ளது.



பள்ளிக்கல்வி செயலர், உதயசந்திரனின் நேரடி மேற்பார்வையில் அமைக்கப்பட்ட கமிட்டியினர், பாடத் திட்டம் மற்றும் பாட புத்தக தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத் திட்டம் அறிமுகமாகிறது.இதில், ஒன்று, ஆறு, ஒன்பது ஆகிய வகுப்புகளுக்கு, முதல் பருவத்துக்கான புத்தகம் அச்சிடப்பட்டு, பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த புத்தகங்கள், வண்ணமயமான அட்டைகள், புகைப்படங்கள், சித்திரங்கள், பார்கோடு ஆகியவற்றுடன் தயாரிக்கப்பட்டுள்ளன.
பிளஸ் 1 வகுப்புக்கு மொழி பாட புத்தகங்களின் தயாரிப்பு, முழுமையாக முடிந்துள்ளன. மற்ற பாடங்களுக்கு, புத்தகம் அச்சடிக்கும் பணி நடந்து வருகிறது.தற்போது அமலிலுள்ள, பழைய பாடத் திட்டத்தில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாட புத்தகம், சிறிய அளவில், அதிக பக்கங்களை கொண்டதாகவும், கருப்பு - வெள்ளையிலும் அச்சடிக்கப்பட்டுள்ளது. புதிய பாடப் புத்தகத்தில், பிளஸ் 1 புத்தகம், மற்ற வகுப்புகளைப் போல், 'ஏ - 4' அளவிற்கு மாற்றப்பட்டு, வண்ணமயமாக மாறியுள்ளது.இவற்றில், ஒவ்வொரு பாடத்திலும், அதன் பார்முலாக்கள், சமன்பாடுகள் வரும் இடங்களில், அதற்கான உதாரணங்கள், படங்களுடன் சித்தரிக்கப்பட்டுள்ளன.
அன்றாட வாழ்க்கையில் உள்ள சம்பவங்கள், காட்சிகளையே, உதாரணமாக்கி, படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.மேலும், குறிப்பிட்ட பாட அம்சத்திற்கான, 'வீடியோ' செயல் விளக்கமும், அதற்கான இணையதள, யூ.ஆர்.எல்., இணைப்பும், புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இணைப்பை பயன்படுத்தி, மாணவர்கள், 'யூ டியூப்' அல்லது இணையதள பக்கங்கள் வழியாக, தெரிந்து கொள்ள முடியும்.

Comments