பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வில் புதிய மாற்றம் மொழி பாடத்தாள்களை இரண்டாக குறைக்க திட்டம்

பிளஸ் 1, பிளஸ் 2வில், மொழி பாடங்களில், இரண்டு தாள் முறையை மாற்றி, ஒரே தேர்வாக நடத்த, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

இதனால், மாணவர்களின் மன அழுத்தம் குறைவதுடன், தேர்வுத் துறைக்கு, 36 லட்சம் விடைத்தாள்களை திருத்தும் சுமை குறையும் வாய்ப்புள்ளது.



கட்டாயம் தமிழக பாடத்திட்டத்தில், இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கும், பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதனால், தேர்வு பணிகள் இரட்டிப்பாகி உள்ளன. பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய, மூன்று வகுப்புகளுக்கும், ஒரு மாதத்திற்குள் தேர்வை நடத்தி, ஒரு மாதத்திற்குள் விடைகளை திருத்தி, தேர்வு முடிவை வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்கு, தேர்வுத் துறைக்கு தேவையான கால அவகாசம் இல்லை.எனவே, பிளஸ் 1க்கு, பொது தேர்வையும் நடத்த வேண்டும்;
அதேநேரம், பணிச் சுமையையும் குறைக்க வேண்டும் என்ற நோக்கில், புதிய மாற்றங்களை கொண்டு வருவது குறித்து, பள்ளிக் கல்வித் துறை ஆலோசனை நடத்தி வருகிறது.

இதில், மொழி பாடங்களுக்கு மட்டும், தேர்வு களை குறைத்தால், வேலைப் பளு குறைந்து, தேர்வுகளை உரிய நேரத்தில் நடத்தி, முடிவை வெளியிடலாம் என, ஆசிரியர்கள் தரப்பில் யோசனைகள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.
அதன்படி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும், தமிழ், ஆங்கிலம் அல்லது விருப்ப மொழி பாடம் ஆகியவற்றில், தற்போது உள்ள, முதல் தாள், இரண்டாம் தாள் என்பதை, ஒரே தாளாக குறைத்து, தேர்வை நடத்தலாம் என,ஆலோசிக்கப்பட்டுள்ளது.

மொழித் தேர்வு
இந்த திட்டம் அமலானால், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, முக்கிய பாடங்களை போல், தமிழ், ஆங்கிலம் மற்றும் மொழி பாடத்திற்கு, தலா, ஒரு தேர்வு மட்டுமேநடத்தப்படும்.

இது குறித்து, அதிகாரிகள் கூறுகையில், 'மொழி பாட தேர்வை குறைப்பதா, வேண்டாமா என, பல தரப்பிலும் கருத்துகள் பெற்று, அரசு முடிவு எடுக்கும். தற்போதைய நிலவரப்படி, மொழி பாடங்களுக்கு, இரண்டு தாள் தேர்வு முறை தொடர்கிறது' என்றனர்.

தேர்வு குறைந்தால் என்ன பலன்?

இது குறித்து, அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் கூறியதாவது:

இரண்டு தாள்களை, ஒரே தாளாக குறைக்கும் திட்டத்தை, தமிழ் ஆசிரியர்கள், பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த திட்டம் வந்தால், தற்போது நடத்தப்படும், மொத்த தேர்வுகளின் எண்ணிக்கை, எட்டில் இருந்து, ஆறாக குறையும் மாணவர்களுக்கு மொழி பாடங்கள் மீதான, மன அழுத்தமும், சுமையும் குறைவதுடன், அவற்றின் மீது ஆர்வம் அதிகரிக்கும். முக்கிய பாடங்களில், கூடுதல் கவனம் செலுத்த, நேரம் கிடைக்கும் பொது தேர்வு அட்டவணையில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய, இரண்டு வகுப்புகளுக்கும் சேர்த்து, நான்கு தேர்வுகள் ரத்தாகும்.

எனவே, தேர்வு நடக்கும் நான்கு நாட்கள், அவற்றுக்கு இடைவெளி காலம், ஆறு நாட்கள் ஆகியவற்றை சேர்த்து, தேர்வு அட்டவணையில், 10 நாட்கள் குறையும் பொது தேர்வு, துணை பொது தேர்வு மற்றும் உடனடி தேர்வு ஆகியவற்றை சேர்த்து, மொத்தம், 9 லட்சம் மாணவர்கள், மொழி பாட தேர்வை எழுதுகின்றனர் இதில், நான்கு தேர்வுகள் ரத்தானால், 36 லட்சம் விடைத்தாள்களை திருத்தும் சுமை, தேர்வுத் துறைக்கு குறையும் விடைத்தாள் திருத்துவதில், ஒரு நாளைக்கு, மூன்று லட்சம் வீதம், 36 லட்சம் விடைத்தாள்களுக்கு, 12 நாட்கள் குறையும். அதனால், தற்போதுள்ள காலத்தை விட, முன்கூட்டியோ அல்லது தாமதமின்றியோ, தேர்வு முடிவை வெளியிட முடியும் வினாத்தாள் தயாரிப்பு, விடைத்தாள் காகிதம் கொள்முதல், தேர்வுக்கான செலவு, தேர்வு மையம் அமைத்தல், தேர்வுக்கான கண்காணிப்பாளர்கள், விடை திருத்துவோருக்கான ஊதியம் போன்ற வகைகளில், தேர்வுக்கான செலவில், பல கோடி ரூபாய் குறையும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.-

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்