TET - ஆசிரியர் தகுதித் தேர்வு தரவரிசைப் பட்டியல்வெளியிடக் கோரி ஆர்ப்பாட்டம்

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிடக் கோரி, தேர்வெழுதியவர்கள் சென்னையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசுப் பள்ளிகளில் பணியாற்றுவதற்காக இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசியர்களுக்கான தகுதித் தேர்வுகள் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கடந்த ஆண்டு ஏப்ரல் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்தத் தேர்வை மொத்தம் 7.4 லட்சம் பேர் எழுதினர்.தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் ஜூலை 24 -ஆம் தேதி நடைபெற்றன.

ஆனால், இந்தத் தேர்வுகளுக்கான தரவரிசைப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இதுவரை வெளியிடவில்லை. இதையடுத்து, தரவரிசைப் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும்; தேர்ச்சிக்கான சான்றிதழை வழங்க வேண்டும்; புதிய ஆசிரியர்கள் நியமனத்தை தொடங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி 2017 -ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய தேர்வர்கள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கூறும்போது, "எங்களது கோரிக்கைகள் குறித்த மனுவை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் கே.நந்தகுமாரை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து வழங்கியுள்ளோம்.அப்போது இரு மாதங்களில் தேர்ச்சிக்கான சான்றிதழ் வழங்கவும், தரவரிசைப்பட்டியல் வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்' என்றனர்.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்