'சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதித்தால் பெற்றோருக்கு தண்டனை' - போலீசார் எச்சரிக்கை
'சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர், உறவினர் மற்றும் வாகன உரிமையாளர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, போலீசார் எச்சரித்து உள்ளனர்.
தேர்வு முடிந்து, கோடை விடுமுறை நெருங்குவதால், 18 வயதுக்கும் குறைவான மாணவர்கள் மற்றும் சிறுவர்கள், இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டி, சாகத்தில் ஈடுபடுவர். தங்கள் குழந்தைகள், வீரதீர செயலில் ஈடுபடுவதாக, பெற்றோரும் உற்சாகப்படுத்துவர். இது சட்டப்படி குற்றம்.மோட்டார் வாகன சட்டம், 1988ன் படி, ஓட்டுனர் உரிமம் இல்லாமல், எந்த நபரும், பொது இடங்களில், வாகனங்கள் ஓட்டக்கூடாது. அதேபோல், 18 வயதுக்கும் குறைவானவர்களும், சாலை உள்ளிட்ட பொது இடங்களில், இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஓட்ட தடை உள்ளது.
ஆனால், தடையை மீறி, சிறுவர்களை வாகனங்கள் ஓட்ட அனுமதிப்பதால், விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. அதை தடுக்க, சென்னை போலீசார், நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:மோட்டார் வாகன சட்டம், 1988, பிரிவு, 180ன் படி, ஓட்டுனர் உரிமம் இல்லாத நபரை அல்லது 18 வயதுக்கு குறைவான நபர்களை, வாகனங்கள் ஓட்ட அனுமதிப்பது குற்றமாகும். இந்த குற்றச்செயலில் ஈடுபடுவோருக்கு, 1,000 ரூபாய் அபராதம் மற்றும் மூன்று மாதம் சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கலாம்.
இதனால், ஓட்டுனர் உரிமம் இல்லாமல், எந்த நபரும் வாகனங்கள் ஓட்டக்கூடாது. மேலும், 18 வயதுக்கு குறைவானவர்களை, அவர்களின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள், வாகனங்களை ஓட்ட அனுமதித்தால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.இந்த உத்தரவை, தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்த, உயர் போலீஸ் திகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
Comments
Post a Comment