வகுப்பறையில் மாணவன் தூங்கியது தெரியாமல், பள்ளியை பூட்டி விட்டு சென்ற சம்பவம்

வகுப்பறையில் மாணவன் தூங்கியது தெரியாமல், பள்ளியை பூட்டி விட்டு சென்ற சம்பவத்தையொட்டி நேற்று காலை மாணவர்களின் பெற்றோர், கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருக்கனூர்,

திருக்கனூரை அடுத்த பி.எஸ்.பாளையத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் மாலையில் அந்த பள்ளியின் மாணவன் வேல்முருகன் (வயது 10), வகுப்பறையில் தூங்கி விட்டான். இது தெரியாமல் பள்ளி நேரம் முடிந்ததும் ஆசிரியர் பள்ளியை பூட்டிவிட்டு சென்றுவிட்டார்.

இந்தநிலையில் மாலை 5.30 மணி அளவில் தூக்கம் கலைந்து எழுந்த மாணவன் வேல்முருகன் பள்ளியில் யாரும் இல்லாததைக் கண்டும், பள்ளி கதவு பூட்டி இருப்பதை அறிந்தும் வகுப்பறை கதவில் ஏறி உதவி கேட்டு கூச்சல்போட்டான். சத்தம் கேட்டு அந்தபகுதியைச் சேர்ந்தவர்கள் திருபுவனை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து மாணவன் வேல்முருகனை மீட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் பள்ளி தொடங்கியதும், அந்த பகுதியைச் சேர்ந்த மாணவர்களின் பெற்றோர் சிலர் மற்றும் அப்பகுதி மக்கள் அங்கு வந்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பள்ளியில் தொடர்ந்து தவறுகள் நடப்பதாகவும், அவை மூடி மறைக்கப்படுவதாகவும், மாணவ-மாணவிகளை வகுப்பறைகளையும், கழிவறைகளையும் சுத்தம் செய்யச் சொல்வதாகவும் குற்றம்சாட்டி கோஷம் எழுப்பினார்கள். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கல்வித்துறை 5-ம் வட்ட ஆய்வாளர் பக்கிரிசாமி மற்றும் திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டம் நடத்தியவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது மாணவனை பள்ளியில் வைத்து பூட்டிவிட்டு சென்ற ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கல்வித்துறை அதிகாரி பக்கிரிசாமி விசாரணை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து துறை ரீதியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி துறை அதிகாரி உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பெற்றோரின் இந்த திடீர் போராட்டம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Comments

Popular Posts

Google Maps! Latest Update for Bikers!