இளைஞர்களின் வித்தியாச அழைப்பு! ஏப்ரல் ஃபூல் வேண்டாமே.. "ஏப்ரல் கூல்" போதுமே..
முட்டாள்கள் தினம்...!
ஏப்ரல் 1-ம் தேதியை நண்பர்கள், குடும்பத்தினர் போன்றோரிடம் வேடிக்கை செய்வதும், அவர்களை முட்டாளாக்கி மகிழ்வதையும் உலகம் முழுவதுமுள்ள மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஆங்கில மோகம்... இதிலும் நம்மை விட்டுவைக்கவில்லை...

முட்டாள்கள்தினம் ஐரோப்பிய நாடுகளில் எதற்காக ஆரம்பிக்கப்பட்டது என்பதற்கு வரலாற்று காரணங்களும், நகைச்சுவை காரணங்களும் பல கூறப்படுகின்றன. உறுதியான காரணம் இதுவரை சரியாக தெரியவில்லை. அப்படியே தெரிந்தாலும் அதனால் நமக்கேதும் நிகந்துவிடபோவது இல்லை.
ஆனாலும் சரியான காரணம் தெரியாமலேயே உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் இந்த முட்டாள்கள் தினம் நம்ம ஊர் மக்களையும் தொத்திக்கொண்டு விட்டதுதான் காலத்தின் கோலம்.
பிரபல தொலைக்காட்சிகள் கூட ஒருவரை ஏமாற்றுவதையும், ஏமாறுவதையும் காண்பித்து, 'கல்லா' கட்டிக்கொள்ளும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இதற்கு பத்திரிகைகளும் விதிவிலக்கல்ல... முன்பு ஒரு தமிழ் வார இதழ், குஷ்புவுக்கும், பாலச்சந்தருக்கும் திருமணம் என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியதை யாரும் மறந்திருக்க முடியாது.
நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.
அதாவது ஒருவரை ஒரு சில நிமிட சிரிப்பிற்காக இகழ்வதும் பரிகசிப்பதும் விளையாட்டிலும் துன்பம் தரக்கூடியது, ஆனால் பண்புள்ளவர்கள், பகைவரே ஆனாலும் விளையாட்டிற்கு கூட இகழ மாட்டார்கள் என்கிறார் வள்ளுவர்.
எங்கோ, எதற்கோ துவங்கிய இந்த முட்டாள்கள் தினத்திற்கும் தமிழகத்துக்கும் என்ன சம்பந்தம்?
அதை கொண்டாடுவதால் என்ன நன்மை கிடைத்துவிடப்போகிறது?
சட்டையில் மை அடிப்பது, கலர் காகிதம் ஒட்டுவது, நக்கலடிப்பது, கிண்டலடிப்பது, திடீரென அதிர்ச்சி அளிப்பது... இப்படி பல செயல்களில் ஈடுபட்டு மகிழ்வதற்கு ஒருநாளா?
விளையாட்டுக்காக செய்யும் அதிர்ச்சிகளை எல்லோரும் ஒரே மாதிரியாக எடுத்து கொள்வார்களா? பலவீனமான இதயம் கொண்டவர்களுக்கு எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என யோசித்ததுண்டா?
விளையாட்டு வினையான சம்பவங்களை அனுபவித்ததுண்டா?
மகிழ்ச்சி என்றாலும் கூட அதில் ஆபத்து நிறைந்திருக்கக்கூடும் என புரியாதா?
முட்டாள் ஆகாமல் நாம் இந்த ஒருநாள் மட்டும் இருந்தால் போதுமா?
மற்ற எல்லா நாளும் எல்லோருமே அறிவாளிகளாக இருந்துவிட முடியுமா?
எல்லா அறிவாளிகளிடமும் ஒரு சிறு முட்டாள்தனம் ஒட்டிக் கொண்டுதான் இருக்கும். அதை வெளிப்படுத்தும் விதத்தில்தான் அவன் அறிவாளியா, முட்டாளா என தெரியவருகிறது.
நேர்மையாக, நாணயமாக, உண்மை பேசி வாழ வேண்டிய மனிதர்கள் கூட இந்நாளில் மற்றவர்களை நையாண்டி செய்து பொய் சொல்லி விளையாடுவது கவலைக்குரியதே.
அறிவும், அபரிமிதமான அறிவியில் வளர்ச்சியும் கண்டுள்ள இந்த காலகட்டத்தில் மனிதர்களில் சிலர் இப்படி பிற்போக்கு சிந்தனைக்கு பலியாகியுள்ளது பரிதாபத்திற்குரியதே.
இத்தகைய பிற்போக்குதனத்திற்கு தவறான குறுஞ்செய்தி அனுப்பி, மீம்ஸ்களை உருவாக்கி, பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் போன்ற நவீனத்துவத்தை துணைக்கு அழைத்து செல்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
மெத்த படித்த மேதாவிகளும், வருங்கால இந்தியா என நம்பிக்கொண்டிருக்கும் சில இளைஞர்களும்கூட இந்த முட்டாள்கள் தினத்தில் ஈடுபடுவது வருத்தமளிக்கிறது.
ஆனால் அதே இளைஞர்களில் சிலர், கடந்த இரு தினங்களாக சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு தகவல் ஒன்றினை வாட்ஸ்ஆப் மூலம் பரிமாற்றம் செய்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து வருகின்றனர்.
ஏப்ரல் ஃபூல் கொண்டாடுவதைவிட அன்றைய தினம் ஏப்ரல் கூல் என்ற பெயரில் வீட்டுக்கு ஒரு மரக்கன்று நட்டுவைக்கலாம் என்று அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இது மிகவும் வரவேற்கத்தக்கதாகவும், மகிழ்ச்சியளிப்பதாகவும் இந்த சூழ்நிலைக்கு தேவையான ஒன்றாகவும் உள்ளது.
உண்மைதான். அன்றைய தினம் மரக்கன்று நடுவதால், சுற்றுசூழல் இனிமை பெறும், மாசு குறையும், மரங்களின் எண்ணிகை பெரும், குளுமைக்கான வாய்ப்பு அதிகரிக்கும். வரப்போகிற கோடையை எப்படி சமாளிக்கலாம் என்று ஏற்கனவே விழிபிதுங்கி இருக்கும் நேரத்தில் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை பரிமாறிவரும் அந்த இளைஞர்களுக்கு ஒரு சபாஷ் போடலாம்.
ஒரு தினத்தை நாம் கொண்டாடுவதில் தவறில்லை. ஆனால் ஏன் கொண்டாடுகிறோம், எதற்கு கொண்டாடுகிறோம் என்று தெரிந்து உணர்ந்து கொண்டாட வேண்டும். அதில் ஒரு நியாயம் இருக்க வேண்டும், அடுத்தவர்களுக்கு உபயோகம் இருக்க வேண்டும். அதற்கு மேற்கூறிய இளைஞர்கள் நல்ல துவக்கத்தை எடுத்து வைத்துள்ளனர்.
எனவே, ஐரோப்பிய நாட்டின் கண்டுபிடிப்பான இந்த ஏப்ரல் பூல் தினத்தை நாம் கொண்டாட வேண்டும் என்ற அவசியமும் இல்லை, கட்டாயமும் இல்லை, அதனால் பத்து பைசாகூட பிரயோஜனம் இல்லை. ஒருவரை மகிழ்விக்கவும், மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொள்ளவும் ஆயிரம் வழி உண்டு. அதற்கு இத்தகைய மலிவான செயல்கள் தேவையில்லை.
மனிதனின் பகுத்தறிவுக்கு வேட்டு வைக்கும் இத்தகைய பழமைவாதத்தை தூக்கியெறிந்து, நம் நாட்டின் சூழ்நிலைகளை உணர்ந்து... தேவைகளை அறிந்து... செயல்பட வேண்டியது கட்டாயமான ஒன்றாகும்.
Comments
Post a Comment