ஒன்பது பள்ளிகளை திறந்த ரிக்‌ஷா ஓட்டுநர்!




கடந்த 40 ஆண்டுகளில் ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக ஒன்பது பள்ளிகளை திறந்து வைத்துள்ள அசாமைச் சேர்ந்த ரிக்‌ஷா ஓட்டுநரின் செயல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அசாமின் கரீம்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த ரிக்‌ஷா ஓட்டுநர் அஹ்மத் அலி. இவருக்கு இரண்டு மனைவிகளும் ஏழு குழந்தைகளும் உள்ளனர். குடும்பச் சூழல் மற்றும் வறுமை காரணமாக மிகவும் இளம் வயதிலேயே ரிக்‌ஷா ஓட்டத் துவங்கியுள்ளார் அஹ்மத்.

சிறு வயதிலேயே கல்வியை இழந்த இவர், தன்னைப் போல அடுத்த தலைமுறையினரும் படிப்பை நிறுத்திவிடக்கூடாது என்று எண்ணினார். அதனால் ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக பள்ளி ஒன்றை கட்ட முடிவு செய்தார். ஆனால் அவரிடம் பள்ளிக்கட்டும் அளவிற்கு போதிய வருவாய் இல்லை. தன்னிடம் உள்ள நிலத்தை விற்பனை செய்து சிறிது பணம் ஏற்பாடு செய்தார். மேலும் கிராம மக்களிடம் இருந்தும் பணம் சேகரித்து, 1978ஆம் ஆண்டு தனது முதல் பள்ளியைத் திறந்தார். இப்படி கடந்த 40 ஆண்டுகளில் மட்டும் தனது பகுதியில் ஒன்பது பள்ளிகளை அஹமத் திறந்து வைத்துள்ளார்.

மூன்று ஆரம்ப துவக்கப் பள்ளிகளையும், ஐந்து ஆங்கில வழி கல்வி கற்பிக்கும் நடுநிலைப் பள்ளிகளையும், ஒரு உயர்நிலைப் பள்ளியையும் கட்டியுள்ள அஹமத், விரைவில் ஒரு கல்லூரி கட்டவும் விரும்புகிறார்.

இது குறித்து அஹமத், "படிப்பறிவின்மை எந்த ஒரு சமூகத்திற்கும் சாபக்கேடு. இதனால் வாழ்வதற்கான ஆதாரமே இல்லாமல் போகும். குழந்தைகள் நன்றாக படித்து நல்ல பணியில் அமர்வதே எனது மகிழ்ச்சி" என்று தெரிவித்துள்ளார்.

Comments

Post a Comment