அரசுப் பள்ளிகளும் கட்டுக்கதைகளும்: ஆய்வு முடிவு மற்றும் அலசல்

நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை, இந்தித் திணிப்பு, வணிகமயமாக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள், மதிப்பெண்களை மையப்படுத்திய பாடத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் தமிழகத்தில் இன்று பள்ளிக் கல்வியானது பெரும் சிக்கலில் சிக்கியுள்ளது.



இந்த சமயத்தில், பொதுக்கல்வி குறித்து முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆட்சியாளர்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், கல்வியாளர்கள் என அனைத்து தரப்பினரும் பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.


பொதுக்கல்வி, அரசுப் பள்ளிகள் என்றவுடன் பெரும்பான்மை மக்கள் மனதில் ஒரு ஒவ்வாமை தோன்றும். அந்த ஒவ்வாமை தோன்றாமல் இருந்தால்தான் ஆச்சர்யம். அதிலும், குறிப்பாக கடந்த 20 ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளின் நிலைமை மிகவும் வேதனைக்குரியதாகத்தான் உள்ளது.

ஒரு பக்கம் தொடக்கப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. மற்றொரு பக்கம், தனியார் பள்ளிகள் புற்றீசல்போல் முளைத்துக் கொண்டே இருக்கின்றன. மாணவர்களை அதிக மதிப்பெண்கள் எடுக்க வைக்கும் பள்ளிகளின் முன் குவியும் பெற்றோர்கள் ஆண்டுதோறும் பெருகிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

அரசுப் பள்ளிகளில் நல்ல கல்வி கிடைக்காது என்ற மக்களின் மனநிலைக்கு காரணம் அரசுப் பள்ளிகள் குறித்த பொதுமக்களின் அவநம்பிக்கை.

இருள்மண்டிய இந்த அவநம்பிக்கைகளின் மீது வெளிச்சைத்தை பாய்ச்சி, அரசுப் பள்ளிகளின் உண்மை நிலையைக் கண்டறிய உதவும் வகையில் வெளிவந்துள்ளது ‘சமகல்வி இயக்கம்’ நடத்திய ஆய்வின் முடிவுகள்.

தமிழக அரசு, கல்வித் துறை அதிகாரிகள் அரசுப் பள்ளிகளில் உள்ள குறைகளைக் களைந்து அப்பள்ளிக்கூடங்களை எல்லோருக்குமானதாக மாற்றும் நடவடிக்கைகளில் மணித்துளியும் தாமதிக்காமல் இறங்க வேண்டும் என்பதைத்தான் ‘சமகல்வி இயக்கம்’ அரசுப் பள்ளிகளில் மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவுகள் உணர்த்துகின்றன.

சென்னை, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் தலா 2 அரசுப் பள்ளிகள் வீதம் மொத்தம் 18 பள்ளிகளில், உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்-மாணவர் விகிதம், தேர்ச்சி விகிதம் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

சிறிய அளவிலான ஆய்வு என்ற போதிலும், இந்த ஆய்வின் முடிவுகளை அடிப்படையாகக்கொண்டு முன்னெடுக்க வேண்டிய செயல்பாடுகள் மிக மிக அதிகம். ஏற்கெனவே உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்தவும், புதிய அரசு பள்ளிகளை உருவாக்க வேண்டியதன் தேவையும் இந்த ஆய்வு முடிவுகளின் முக்கிய சாராம்சமாக உள்ளது. அதேசமயத்தில், இந்த ஆய்வு முடிவுகளும், பெரும்பாலான அரசு பள்ளிகளின் நிலைமையும் முற்றிலும் முரணாக உள்ளது என கல்வியாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

2000க்குப் பிறகு புதிய அரசுப் பள்ளிகள் உருவாக்கமும், உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்துதலும் பெருமளவில் குறைந்திருப்பதை இந்த ஆய்வு சுட்டிக் காட்டுகிறது. ஆனால், 67% பள்ளிகளில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து, தமிழகத்திலுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை இதே அளவில் கணிசமாக உயர்ந்திருக்குமா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

இந்த கேள்வியை ‘சமகல்வி’ இயக்கத்தின் பொதுச் செயலாளர் செல்வகுமாரிடம் முன்வைத்தபோது, “இந்த ஆய்வு முடிவை அடிப்படையாக வைத்து, தமிழகத்திலுள்ள கிட்டத்தட்ட 53,000 அரசுப் பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. 

கரூர், ஈரோடு மாவட்டங்களில் பல அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வீடு, வீடாக பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். அதுமட்டுமல்லாமல், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெற்றோர்கள் பலரும் தனியார் பள்ளிகளின் மீதான கவர்ச்சியில் அப்பள்ளிகளில் பிள்ளைகளை சேர்த்துவிடுகின்றனர். ஆனால், தனியார் பள்ளிகளில் அதிகரிக்கும் கட்டணம் காரணமாக, பிள்ளைகளை பாதியிலேயே அரசுப் பள்ளிகளில் சேர்க்கும் நிலைமையும் உள்ளது”, என்கிறார்.

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் நிலைமை, ஆசிரியர் - மாணவர் விகிதம், ஆசிரியர் காலிப் பணியிடங்கள் குறித்தே விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும். ஏனென்றால், மேற்கூறிய ஆய்விலேயே 6% பள்ளிகளில் ஆங்கில மொழிப் பாடத்திற்காக ஒரு ஆசிரியர் கூட இல்லை என்பதும், 22% பள்ளிகளில் அறிவியல் பாட ஆசிரியர்கள் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட 18 பள்ளிகளிலேயே இந்த நிலைமை என்றால், தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசுப் பள்ளிகளிலும் ஆசிரியர்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டால், அதன் முடிவுகள் மேலும் அதிர்ச்சியைத் தரக்கூடியதாகவே இருக்கும்.

அதேபோல், தமிழ்நாடு கல்வி விதிகளின் அடிப்படையில் ஒரு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் வாரத்திற்கு 28 வகுப்புகள் எடுக்க வேண்டும். இந்த ஆய்வின்படி, 56% ஆசிரியர்கள் 21-30 வகுப்புகள் எடுக்கின்றனர். அதேபோல், மேல்நிலைப் பள்ளிகளில் 31-40 வகுப்புகளை எடுக்கின்றனர். ஆனால், பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் இதே நிலைமைதான் நீடிக்கிறதா என்றால் இல்லையென்றே கல்வியாளார்களிடமிருந்து பதில் வருகிறது.

‘பெத்தவன்’, ‘செடல்’ ஆகிய நாவல்களைப் படைத்த எழுத்தாளரும், பொதுப் பள்ளிகளின் முக்கியத்துவம் குறித்து பேசி வருபவருமான இமையம், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது பல முக்கிய குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். அவற்றில் பல நமக்கு அதிர்ச்சி தருவதாய் அமைந்துள்ளன.

“ஆய்வில் சொல்வதெல்லாம் ஒரு சதவீதம்தான் இருக்கும். அப்படியே அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் வகுப்புகளுக்கு செல்வதாக வைத்துக்கொண்டாலும், அவர்கள் பாடம்தான் நடத்துகிறார் என்பதைக் கூற முடியாது. மிகவும் பொறுப்பற்றவர்களாக இருக்கின்றனர். மாணவர்கள் மீதும், சமூகம் மீதும் அக்கறைகொண்டு பாடம் நடத்தி மாணவர்களை ஊக்குவிக்கும் ஆசிரியர்கள் குறித்து நாம் ஊடகங்களில் கேள்விப்படுவதெல்லாம் மிகவும் சொற்பம்.

பெரும்பாலான அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தொலைதூரக் கல்வி பயின்றவர்களாக இருக்கின்றனர். அவர்களால் மாணவர்களுக்கு திறம்பட பாடம் நடத்த முடிவதில்லை. அரசு கண்காணிப்பதில்லை. அரசுப் பள்ளி ஆசிரியர் நன்றாகப் பாடம் நடத்தவில்லை என பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?”, என நம்மிடம் கேள்வி எழுப்புகிறார்.




இது ஒருபுறமிருக்க அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு என்பது பொதுமக்களிடையே எப்போதும் கவலைக்குரியதாகவும், அச்சத்தை ஏற்படுத்தும் விதத்திலுமான தோற்றம்தான் இதுவரை நிலவிவருகிறது. இந்த ஆய்வில் எடுத்துக்கொண்ட பள்ளிகளில், ஆய்வகம், நூலகம், மைதானம் ஆகியவை பெரும்பாலான பள்ளிகளில், அதாவது 90 சதவீதத்துக்கும் மேல், நல்ல நிலையில், பயன்படுத்தக் கூடியதாக உள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது. கழிவறைகளைப் பொறுத்தவரை 500-1000 மாணவர்களைக்கொண்ட அரசுப் பள்ளிகளில் தரம் உயர்த்தப்பட வேண்டும் எனவும், 22% பள்ளிகளில் தரமான குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆனால், அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு குறித்து இமையம் கூறும் வாதம் வேறுவிதமாக உள்ளது.

“தமிழகத்தில் 90% அரசுப் பள்ளிகளில் ஆய்வகமே கிடையாது. ஆய்வகம் இருந்தாலும் அதற்கான உபகரணங்கள் இருக்காது. நிலைமை இப்படியிருக்கையில், ஆய்வக உதவியாளார் என்ற பணியிடத்தை அரசு உருவாக்கியுள்ளது. எந்தவொரு வேலையும் செய்யாமல் ஆய்வக உதவியாளர் என்ற பெயரில் அரசுப் பள்ளிகளில் ஒருவர் இருக்கிறார்”, என்கிறார்.

இதே ஆய்வறிக்கையில் ஒப்புமைக்காக 17 தனியார் பள்ளிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அந்த ஆய்வு முடிவுகளை உற்றுநோக்கினால், பொதுப்பள்ளிகள் ஏன் தேவை? கிராமப்புறங்களில் மூடப்படும் ஒவ்வொரு அரசு தொடக்கப்பள்ளி குறித்தும் நாம் ஏன் கவலைகொள்ள வேண்டும் என்பதும் புலப்படும். தனியார் பள்ளிகளின் பெருக்கத்தால் எத்தகைய அளவில் பாகுபாடு ஏற்பட்டுள்ளது என்பதும் தெளிவாகும்.

கிராமப்புறங்களிலுள்ள அரசுப் பள்ளிகளில் பட்டியலின மாணவர்கள் அதிகம் பேர் படிப்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. அதே சமயம், தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை பட்டியலின மாணவர்கள் குறைவாகவே படிக்கின்றனர்.

வணிகமயமாக்கப்பட்ட தனியார் பள்ளிகள் மதிப்பெண்களைத்தான் கல்வியின் தரம் என நிர்ணயித்து, அதை பெற்றோர்கள் மத்தியில் விளம்பரங்கள் வாயிலாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. அதை நம்பி, சாதிய ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின் தங்கியுள்ளவர்களும் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டுகின்றனர்.

“தனியார் பள்ளிகளில் படித்தால் பிள்ளைகள் அறிவாளிகளாக வளர்வார்கள் என்ற எண்ணம் பெற்றோர்களிடையே உள்ளது. இதுதவிர ஆங்கில மோகம், தனியார் பள்ளியில் படித்தால் வேலை கிடைக்கும், சுய கௌரவம் உள்ளிட்ட காரணங்களால், அரும்பாடுபட்டு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர்”, என கூறுகிறார் இமையம்.

அனைத்து தரப்பு குழந்தைகளும் சமமாக ஒரே மாதிரியான பள்ளிகளில், தரமான கல்வியை படிக்க அரசால் உறுதிப்படுத்த முடியவில்லை. தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிள்ளைகளை அரசின் நிதியுதவி மூலம் சேர்க்க கல்வி பெறும் உரிமைச் சட்டம் வழிவகை செய்கிறது. ஆனால், அந்த சட்டத்தின்படியும் ஏழை, எளிய பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதில் அரசிடம் வெளிப்படைத் தன்மை இல்லை.

இந்தச் சட்டத்தின்கீழ் 25 சதவீத இடங்களை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை உட்பட பள்ளிக்கல்வியில் பல மாற்றங்களைக் கொண்டுவந்த கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரனின் அதிகாரம் குறைக்கப்பட்டு, அவருக்கும் மேல் முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டதை நாம் அனைவரும் அறிவோம்.

கல்வித்துறையில் இதுபோன்று அரிதாக உள்ள அதிகாரிகளை ஊக்குவிக்காமல், அவர்களை முடக்கிப்போடும் அரசாகத்தான் தமிழக அரசு உள்ளது. “கல்வித்துறை அதிகாரிகள் செயல்படவில்லை என்பதைவிட, அரசு அவர்களை செயல்படுத்த விடுவதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். காமராஜர் கல்வியில் புகுத்திய புதுமைகளுக்கு பக்கபலமாக இருந்து கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்டவர் கல்வித்துறை அதிகாரியாக இருந்த நெ.து.சுந்தரவடிவேலுதானே”, என்கிறார், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.





சமகல்வி இயக்கத்தின் ஆய்வறிக்கையின்படி, 67% பள்ளிகளில் கல்வியின் தரம் குறித்து அதிகாரப்பூர்வமான ஆய்வு மாவட்ட கல்வி அதிகாரியின் தலைமையில் நடைபெறுவதாக கூறுகிறது. ஆனால், இத்தகைய ஆய்வுகள் கூட சம்பிரதாயமான ஆய்வாகத்தான் இருக்குமோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை.

உள்கட்டமைப்பு, ஆசிரியர் காலி பணியிடங்கள் என அரசு பள்ளிகளில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் ஏராளம்.

அரசு பள்ளிகளில் நிலைமை இப்படியிருக்கையில், இவற்றையெல்லாம் சற்றும் யோசிக்காமல் நடப்பாண்டில் ஆசிரியர் பணியிடங்கள் ஏதும் நிரப்பப்படாது என தமிழக கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆசிரியர் பணியிடங்களை நிரப்பி, அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த அரசு ஏன் தயங்குகிறது? இந்த கேள்வியை பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் முன்வைத்தபோது அவர் கூறியவை இன்னும் வேதனைக்குரியதாய் அமைந்தது.

“உடற்பயிற்சி, நடனம், இசை என அனைத்துக்கும் தனித்தனியாக அதற்கென தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இல்லாத இடத்தை எப்படி பள்ளிக்கூடம் என சொல்ல முடியும்? ஒரு மாணவன், இது என்னுடைய பள்ளி எனக்கூறி பெருமைப்பட வேண்டும். அப்படிப்பட்ட நிலைமையிலா அரசு பள்ளிகள் இருக்கின்றன? பல அரசுப் பள்ளிகள் ஒரேயொரு ஆசிரியரைக் கொண்டு நடைபெறும் நிலைமையில்தான் இருக்கின்றன. கடந்த ஐந்தாண்டுகளில் எத்தனை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என தமிழக அரசால் வெளிப்படையாக சொல்ல முடியுமா?”, என்கிறார்.

தமிழக அரசு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஏன் தயங்குகிறது?

“அரசு பள்ளிகளில் ஆசிரியர் எண்ணிக்கை குறைந்தால், இன்னும் மாணவர் சேர்க்கை குறையும். அப்படி மாணவர் சேர்க்கை குறைந்தால் அதையே காரணம் காட்டி அரசு பள்ளிகளை மூடிவிடுவது சுலபம். அதன்மூலம், பள்ளிக்கல்வியை முழுக்க முழுக்க தனியார் மயமாக்குவது எளிதாகிவிடும்”, என்கிறார் பிரின்ஸ்.

இனிமேல் அரசு பள்ளிகள் உயிர்பிழைக்க வழியே இல்லையா என்ற கேள்விதான் நம் எல்லோரிடமும் மேலோங்கியிருக்கிறது. அரசு பள்ளிகளை காப்பாற்ற முக்கியமாக, உடனடியாக தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன?

“குறிப்பிட்ட புவியியல் எல்லைக்கு இதுதான் பள்ளி என தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.. சிறியது, பெரியது என கிட்டத்தட்ட 80 நாடுகளில் சாத்தியமான இந்த முறை ஏன் இந்தியாவில் சாத்தியமாகாது? 1964-66ல் கோத்தாரி கமிட்டி அரசிடம் அளித்த அறிக்கையில் இந்தியாவை சேர்ந்த கல்வியாளர்கள் மட்டுமின்றி, உலகிலுள்ள பல கல்வியாளர்களும் அளித்த பரிந்துரைகளில் இத்தகைய பொதுப்பள்ளி முறைமையும் ஒன்று. 1968-ல் உருவாக்கப்பட்ட முதல் கல்விக்கொள்கையில் பொதுப்பள்ளி முறைமையும் குறிப்பிடப்பட்டுள்ளதே”, என்கிறார் பிரின்ஸ்.

இந்தியா முழுவதும் புவியியல் எல்லைக்கு ஏற்ப அருகாமைப் பள்ளிகள் உருவாக்கப்பட்டு பொதுப்பள்ளி முறைமையை 20 ஆண்டுகளுக்குள் ஏற்படுத்த வேண்டும் என 1964-லேயே கோத்தாரி கல்விக்குழு இந்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

அருகாமை பொதுப் பள்ளிகள் மூலமாகத்தான் மாணவர்களுக்கு சமமான கல்வியை வழங்கி, அதன்மூலம் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் எனவும் கோத்தாரி கல்விக் குழு அளித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எந்தவொரு சாதாரண குடிமகனும், தன் குழந்தையை தனியார் பள்ளிகளுக்கு அனுப்ப தேவையில்லை என நினைக்கும் அளவுக்கு, அந்த பொதுப் பள்ளிகளின் தரம் இருக்க வேண்டும் என கோத்தாரி குழு பரிந்துரைத்தது.


இந்தப் பரிந்துரையை 1968-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் கல்விக்கொள்கையும் ஏற்றுக்கொண்டது. ஆனால், இன்று வரை பொதுப்பள்ளி முறைமை இந்தியாவில் சாத்தியப்படவில்லை, சாத்தியப்படுத்தப்படவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

பொதுப்பள்ளிகளின் தேவை, முக்கியத்துவம் குறித்து இப்போதல்ல நீண்ட நெடுங்காலமாகவே இந்தியாவில் இதுகுறித்து பேசப்பட்டிருப்பதாக பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறுகிறார்.

“இந்தியாவில் பொதுப்பள்ளிகளின் தந்தை என அழைக்கப்படும் ஜோதிராவ் பூலே, 1882-ல் பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் கல்விக்குழுவான ஹண்டர் கமிஷன் முன்பு, அரசே பள்ளிகளை நடத்தினால்தான் பெண்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் முறையான கல்வி கிடைக்கும் என பரிந்துரை செய்தார்”.

2006-ஆம் ஆண்டு அப்போதைய திமுக ஆட்சியின்போது முத்துக்குமரன் கமிட்டி அளித்த பரிந்துரையில், “பொதுப்பள்ளிகள் தான் சமூகத்தை ஊடுருவும், சமூகத்தை மேம்படுத்தும்”, என கூறியிருக்கிறார். முத்துக்குமரன் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையிலேயே சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டதை இப்போது நாம் நினைத்துகொள்ள வேண்டியது கட்டாயம்.

மாணவர்களிடையே நிலவிவந்த மெட்ரிக்குலேஷன், மாநில பாடத்திட்டம் என்ற பாகுபாட்டை பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு ஒழித்து, செயல்வடிவிலான பாட முறை சமச்சீர் கல்வியால்தான் சாத்தியமானது. “சமச்சீர் கல்வி மிக எளிமையாக இருக்கிறது”, என கேலி செய்பவர்களெல்லாம் உண்டு. ஆமாம், மாணவர்களுக்கு பாடத்திட்டம் எளிதாக புரிந்துகொள்ளும்படிதானே இருக்க வேண்டும்.

இவ்வளவு பிரச்சினைகளையும் சிக்கல்களையும் வைத்துக்கொண்டு ஏன் அரசுப் பள்ளிகள் வேண்டும் என நமக்குள்ளேயே கேள்வி எழுப்பிப் பார்ப்போம். குழந்தைகளுக்கு பாலின சமத்துவம், சமூகத்தில் புரையோடிருக்கும் சாதியப் பாகுபாடு, அதிகார வர்க்கம், எதிர்கால தலைமுறையையே பாதிக்கும் வளர்ச்சி திட்டங்கள் குறித்தெல்லாம் ஒரு மாணவன் இளம் பருவத்திலேயே அறிந்துகொள்ள பொதுப் பள்ளிகள் தான் வேண்டும்.

பொதுப் பள்ளிகளை இனிமேலாவது உயிர்பிழைக்க வைக்க கல்வியாளர்களும், இந்த ஆய்வறிக்கையின் மூலமும் பல பரிந்துரைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவற்றை முறையாக செய்யல்படுத்தினாலே அரசுப் பள்ளிகளைக் காப்பாற்றலாம்.

கல்வித்துறைக்கென ஒதுக்கப்படும் நிதியை மடைமாற்றாமல் கல்வி வளர்ச்சிக்கே செலவிட வேண்டும்.

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களை கல்வி கற்பித்தல் மற்றும் அவை சார்ந்த பணிகளை மட்டுமே செய்யவிட வேண்டும். மக்கள் வசிப்பிட எல்லைகளையும், மலைவாழ் மக்கள் உள்ளிட்ட எளிதில் அணுக இயலாத இடங்களில் புவியியல் எல்லைகளுக்குட்பட்டே பொதுப்பள்ளிகள் அமைக்கப்பட வேண்டும்.

ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒரு தனியார் பள்ளி குறிப்பிட்ட இடத்தில் அமைகிறது என்றால், அதற்காக பள்ளியைத் தொடங்கும் தனியார் அமைப்பு என்ன காரணங்களைச் சொல்கிறதோ அதை ஆராய்ந்து அருகாமையில் உள்ள பொதுப்பள்ளிகளை மேம்படுத்த வேண்டும்.

மாணவனின் வசிப்பிடத்திற்கு 5 கி.மீ. தொலைவை தாண்டி அமைந்திருக்கும் தனியார் பள்ளியின் உரிமத்தை ரத்து செய்வது. அரசு ஊழியர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என மக்களின் வரி மூலம் ஊதியம் பெறும் அனைவரும் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் அனுமதிக்க வேண்டும் என சட்டம் இயற்றல்.

பொதுப் பள்ளிகளை தூக்கி நிறுத்த இனிமேலாவது அரசாங்கம், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என முத்தரப்பு மக்களும் முன்வர வேண்டும். “அரசுப் பள்ளிகளில் தரம் இல்லை”, “சரியான கல்வி கிடைக்காது” என எண்ணும் மக்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்.

கும்பகோணத்தில் பள்ளிக் கட்டிடம் இல்லாமல் தீயில் எரிந்த 94 பிஞ்சுக் குழந்தைகள் அரசுப் பள்ளியில் படிக்கவில்லை.சென்னையில் முறையான பயிற்சியின்றி நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த மாணவி படித்தது நகரின் 'மிக முக்கியமான' தனியார் பள்ளியில். “அரசுப் பள்ளியில் படித்ததால்தான் அனிதா நீட் தேர்வில் தோற்றாள்” என நம்புபவர்களுக்கு ஒன்று, அனிதா படித்தது அரசுப் பள்ளியில் அல்ல. ஆனால், இங்கே அனிதா படித்தது அரசுப் பள்ளியா? தனியார் பள்ளியா? என்பது வாதமல்ல. நீட் தேர்வின் கொடுமைகளை, அதுவொரு சமூக அநீதி என மாணவர்கள் புரிந்துக்கொள்ள பொதுப் பள்ளிகள் ஒன்றே தீர்வாக இருக்க முடியும்.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்