சீர் கொடுத்து மாணவர்கள் சேர்க்கைக்கு அழைப்பு : அரசு பள்ளி ஆசிரியர்கள் அசத்தல்
கடலூர் முதுநகர் சுத்துக்குளம் பகுதியில் உள்ள பள்ளியில் மாணவர்களை சேர்க்கும் பொருட்டு அரசு பள்ளி ஆசிரியர்கள் சீர் கொடுத்து மாணவர்களை அழைத்து வந்தனர்.
இந்நிலையில் வருகிற ஏப்ரல் மாதத்துடன் பள்ளியின் ஆண்டு முடிந்து அடுத்தக்கட்ட கல்வியாண்டு துவங்குகின்ற நிலையில் தலைமை ஆசிரியர் ஜெயந்தி தலைமையில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் சேர்க்கைக்கு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தனியார் பள்ளிகளின் தாக்கம் காரணமாக அரசு பள்ளிகளில் சேர்க்கை குறைந்து வரும் நிலையில் சுத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்கு பள்ளியின் ஆசிரியர்கள் குழு அப்பகுதியில் வீடு, வீடாக சென்று புதிதாக பள்ளியில் சேரவுள்ள மாணவர்களை அடையாளம் கண்டு அரசு பள்ளியில் சேர்க்க பெற்றோர்களை அறிவுறுத்தி வருகின்றனர்.
மேலும் அரசு பள்ளியில் சேர்த்தால் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், பை, உணவுப்பண்ட பொருட்கள், சீருடை, எழுது பலகை என பல்வேறு பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் எனவும் தெரிவித்தனர். இதுமட்டுமின்றி தரமான கல்வியுடன் அரசு சலுகையும் கிடைக்கும் என எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே நேற்று அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில் புத்தக பை, பள்ளி சீருடை, காலணி உள்ளிட்ட தலா ரூ.2 ஆயிரத்துக்கான பொருட்களுடன் 25 மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்க மேள தாளத்துடன் அவர்களது வீடுகளுக்கு சென்றனர்.
பள்ளி சீர்வரிசையை பெற்றோர்களிடம் வழங்கி 25 மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வந்தனர். பின்னர் சீர்வரிசையை மாணவர்களிடம் கொடுக்கும் வகையில் பெற்றோர்களை வணங்கி பெற வைத்தனர். அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் செயல்பாடுகளை பார்த்த சுத்துக்குளம் பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்தனர்
Comments
Post a Comment