அரசு உதவி பெறும் பள்ளியில் காலியிடங்களில் நியமிக்கப்பட்டவர்களின் நியமனத்திற்கு 2 வாரங்களில் ஒப்புதல் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கெடு

அரசு உதவி பெறும் பள்ளியில் காலியிடங்களில் நியமிக்கப்பட்டவர்களின் நியமனத்திற்கு 2 வாரங்களில் ஒப்புதல் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

வேலூர் மாவட்டம் மாதனூரி்ல் உள்ள அரசு உதவி பெறும் தாகூர் தேசிய உயர்நிலைப் பள்ளியில் காலியாக இருந்த இளநிலை உதவியாளர், கிளார்க், அலுவலக உதவியாளர், இரவுக் காவலாளி பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இந்த இடங்களுக்கு கோபி, ரஞ்சனி, யோகநாதன், சாரதி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இவர்களின் நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்கக் கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் அரசுக்கு மனு அனுப்பப்பட்டது .

இந்த மனுவை அரசு பரிசீலிக்காததால் 4 பேர் நியமனத்திற்கு ஒப்புதல் வழங்கக் கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு நீதிபதி டி.ராஜா முன் இன்று (மார்ச் 30) விசாரணைக்கு வந்தபோது அரசு ஒப்புதல் அளிக்காததால் இவர்கள் 4 பேரும் ஊதியம் பெறாமல் இருப்பதாகப் பள்ளி நிர்வாகம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அரசு உதவி பெறும் தனியார் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் அல்லாத காலியிடங்களை நிரப்பக் கல்வி நிறுவனங்களுக்கு உரிமை உள்ளது என உயர் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மேற்கோள் காட்டி 2 வாரத்திற்குள் ஒப்புதல் வழங்கத் தமிழக அரசுக்குக் கெடு விதித்து உத்தரவிட்டார்.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்