ஊதிய முரண்பாடு எதிரொலி பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க ஆசிரியர்கள் முடிவு
ஊதிய முரண்பாடுகளில் உள்ள பிரச்னைகளை நீக்க ஊதியக் குழு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதால் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்கப் போவதாக முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மேனிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் தலைவர் மணிவாசகம் கூறியதாவது:
கடந்த முறை அறிவிக்கப்பட்ட 7வது ஊதியக் குழுவில், ஊதிய முரண்பாடுகள் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. இதனால் ஒரே பள்ளியில் 6ம் வகுப்புக்கு பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்கள் பெறும் சம்பளத்தைவிட அதே பள்ளியில் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ரூ.3 ஆயிரம் ஊதியம் குறைவாக வாங்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளோம்.
அதாவது 1.6.2009 முதல் பணியேற்ற முது நிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட ஊதிய இழப்பை சரி செய்யாமலேயே 8வது ஊதியக் குழு நடைமுறைக்கு வந்துவிட்டது. இந்த முதுநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் திருத்தப்பட வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கு ரூ.18150 க்கு இணையாக வழங்க வேண்டும் என்று கேட்டு வருகிறோம். இதை திருத்த முன்வராத அரசை கண்டிப்பதோடு எங்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பேரில், ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து உள்ளிருப்பு வேலை நிறுத்தம் நடத்துவது என்று முடிவு செய்துள்ளோம்.
இது தவிர உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு பெற்று முகாம் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களை திரும்பப் பெற வேண்டும். அப்படி அவர்களை நியமித்தால் அந்த விடைத்தாள் திருத்தும் மையங்களில் எங்கள் அமைப்பை சார்ந்தவர்கள் 100 சதவீத பணியை புறக்கணிப்பார்கள். இது போன்ற தீர்மானங்களை தமிழ்நாடு மேனிலைப் பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக செயற்குழு, பொதுக்குழுவில் தீர்மானமாக நிற்வேற்றியுள்ளதாக அதன் தலைவர் மணிவாசகன் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment