ஏப்ரல் 2ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதிக்குள் ஓய்வூதியதாரர்கள் நேரில் ஆஜராக வேண்டும்: கருவூல கணக்கு துறை செயலாளர் உத்தரவு

தமிழக அரசு சார்பில் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் ஏப்ரல் 2ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதிக்குள் ஓய்வூதியம்  வழங்கும் அலுவலகத்தில் ஆஜராகி பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழக அரசின் கருவூல கணக்கு துறை முதன்மை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:மாவட்ட கருவூலங்கள் மற்றும் சார் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் தமிழக அரசு ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள்  ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை கருவூலத்தில் நேரடியாக ஆஜராகி நேர்காணலை பதிவு செய்யவும், நேரில் வர இயலாதவர்கள்  வாழ்வுச்சான்று பெற்று கருவூலத்திற்கு அனுப்ப வேண்டும். இந்த ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதி வரை நேர்காணலுக்கு கருவூலம் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்தில் ஆஜராகி பதிவு  செய்ய கருவூலத்தின் வேலை நாட்களில் நேரில் வர வேண்டும்.

ஜீவன் பிரமான் வாழ்வு சான்றிதழ் திட்டம் மூலம் ஓய்வூதியர்கள் சம்மந்தப்பட்ட கருவூலங்களுக்கு செல்லாமலேயே அரசு இ-சேவை மையங்கள்  வழியாக நேர்காணலை இணையதளத்தில் (www.jeevanpramaan.gov.in) ஆதார் அட்டை வாயிலாக பதிவு செய்து அதன்மூலம் நேர்காணல்  செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதுவரை ஆதார் அட்டை, வருமான வரி கணக்கு எண், குடும்ப அடையாள அட்டை மற்றும் நடைமுறையில் உள்ள வங்கி சேமிப்பு கணக்கு எண்  சமர்ப்பிக்காத ஓய்வூதியர்கள், மேற்படி ஆவணங்களின் நகல்களுடன் தங்களின் ஓய்வூதிய கொடுவை எண்ணை குறிப்பிட்டு கருவூலத்தில்  சமர்ப்பிக்கலாம்.

ஓய்வூதியர்கள் நேர்காணலுக்கு வரும்போது ஓய்வூதிய புத்தகம் கொண்டு வரவேண்டும்.நேரில் வர இயலாத ஓய்வூதியர்கள் ஓய்வூதியப் புத்தகம், இதுவரை ஆதார் அட்டை, வருமான வரி கணக்கு எண், குடும்ப அடையாள அட்டை மற்றும்  நடைமுறையில் உள்ள வங்கி சேமிப்பு கணக்கு எண் (www.tn.gov.in/karuvoolam/) சமர்ப்பிக்கவில்லை எனில் அதன் நகல்களுடன்  வாழ்வு சான்றை உரிய படிவத்தில் ஓய்வூதியம் வழங்கும் கருவூலத்திற்கு அனுப்ப வேண்டும்.

குடும்ப ஓய்வூதியர்கள் (நேரில் வருபவர்கள், நேரில் வர இயலாத ஓய்வூதியர்கள்) மறுமணம் புரியவில்லை என்பதற்கான உறுதிமொழியை சமர்ப்பிக்க  வேண்டும். தற்போதைய இருப்பிட முகவரி, கைபேசி எண், மின்னஞ்சல் விவரம் அளிக்க வேண்டும். இதுவரை ஓய்வூதியர் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் விண்ணப்பம் அளிக்காதவர்கள் கருவூலத்தில் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து  வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular Posts

Google Maps! Latest Update for Bikers!