புதிய முறையில் கற்றல் பயிற்சி திட்டம் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

'புதிய பாடத் திட்டத்தை, மாற்றுத் திறன் மாணவர்கள் உள்வாங்கும் வகையில், வீடியோ, ஆடியோ வடிவிலான, புதிய கற்றல் பயிற்சி திட்டம், விரைவில் அறிமுகப்படுத்தப்படும்,'' என, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கோவையில், நேற்று அவர் அளித்த பேட்டி: 
பள்ளிக்கல்வித் துறையில், நிர்வாக மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய இடங்களில்,மண்டல ஆய்வுக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.கோவை மண்டலத்துக்கு, பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரியில், வரும், 12ம் தேதி, இணை இயக்குனர் தலைமையில், ஆய்வுக் கூட்டம் நடக்கிறது.அரசுப் பள்ளிகளில், கணக்கு தணிக்கை பாடம் தேர்வு செய்துள்ள, 20 ஆயிரம் மாணவர்களுக்கு, 500 ஆடிட்டர்கள் மூலம், பயிற்சி அளிக்கப்படும். முதல் கட்டமாக, ஈரோடு மாவட்டத்தில், வரும், 12ம் தேதி, 2,500 மாணவர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்படவுள்ளது.


வேலைவாய்ப்பு அளிக்க கூடிய வகையில், புதிய பாடத் திட்டம் தயாராகி வருகிறது. அடுத்தாண்டு வெளியாகும், பிளஸ் 2 பாடப் புத்தகத்தில், 12 திறன் சார்ந்த பாடத் திட்டங்கள் இணைக்கப்பட உள்ளன.புதிய பாட புத்தகத்தில், 'க்யூ.ஆர்., கோடு' மூலம், மாணவர்கள் பாடத் திட்டம் சார்ந்த வீடியோக்களை பார்வையிட வசதி உள்ளது. இதேபோல், பார்வையற்ற, காது கேளாத மாற்றுத் திறனாளிகள் படிக்க, சைகை வடிவில் வீடியோ, ஆடியோ விரைவில் வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

பிளஸ் 1 புத்தகம் எப்போது வரும்? :

நடப்பாண்டு, ஒன்று,ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்புகளுக்கு, புதிய பாட புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. பள்ளி திறந்து, ஒரு மாதம் கடந்த நிலையில், பிளஸ் 1 வகுப்புக்கு சில சிறப்பு புத்தகங்கள் இன்னும் வழங்கப்படவில்லை.ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: பிளஸ் 1 பாடத்தில், சிறப்பு தமிழ், கம்ப்யூட்டர் அப்ளைடு சயின்ஸ், சமஸ்கிருத புத்தகங்கள் இதுவரை வரவில்லை. ஆன்லைனில் உள்ளதை நகல் எடுத்தாலும், புத்தகத்துக்கும், அதற்கும் வேறுபாடு உள்ளது. மாணவர்கள் குழப்பம் அடைகின்றனர்.

ஜூலை, 25க்கு பின், முதல் பருவ தேர்வு தொடங்க உள்ளது. பொது தேர்வு தேதியை அறிவித்த கல்வித் துறை, புத்தகங்கள் வழங்கும் தேதியை அறிவிக்கவில்லை. செப்டம்பருக்கு பின், இரண்டாம் பகுதிக்குரிய பாடங்கள் நடத்தப்படும். இதுவரை இரண்டாம் பகுதி புத்தகங்கள் வரவில்லை. பாடநுால் கழக அதிகாரிகளிடம் கேட்டால், 'வரும் வரும்' என ஒரே பதிலையே கூறுகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்