ஆசிரியர் பணிக்கு கூடுதலாக போட்டி தேர்வு 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறுவதும் கட்டாயம்

தமிழகத்தில் ஆசிரியர் பணியில் சேர, இனி ஆசிரியர் தகுதி தேர்வுடன், போட்டித் தேர்வையும் எழுத வேண்டும் என, புதிய உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.


அதனால், இனி பள்ளி, கல்லுாரி படிப்பில் பெறும் மதிப்பெண்ணுக்கான, 'வெயிட்டேஜ்' முறையும் ரத்து செய்யப்பட்டுஉள்ளது.ஆசிரியர் பணிக்கு கூடுதலாக போட்டி தேர்வு 'டெட்'  தேர்வில் தேர்ச்சி பெறுவதும் கட்டாயம்மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் அறிவிப்பின்படி, அனைத்து மாநிலங்களிலும், ஆசிரியர் பணிகளுக்கு, தகுதி தேர்வான, 'டெட்' கட்டாயம் ஆகியுள்ளது.

தமிழகத்தில், 2012ல், டெட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது.ஆசிரியர் பணியில் சேர விரும்புவோர், பட்டப்படிப்பு மற்றும் பி.எட்., படித்திருப்பதுடன், கூடுதலாக, 'டெட்' தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும் என, உத்தரவிடப்பட்டது.டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், பள்ளி, கல்லுாரி கல்வி சான்றிதழ் அடிப்படையிலான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையால், பல ஆண்டுகளாக காத்திருப்போருக்கு, வேலை கிடைப்பதில் பிரச்னை இருந்தது.எனவே, வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

புதிய அரசாணை


இந்நிலையில், அரசு பள்ளி ஆசிரியர் பணி நியமனத்திற்கு,'டெட்' தேர்வு மட்டுமின்றி, கூடுதலாக போட்டி தேர்வும் நடத்தப் படும். போட்டி தேர்வு மதிப்பெண்படி மட்டுமே, பணி நியமனம் மேற்கொள்ளப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.இது குறித்த அரசாணையை, பள்ளிக் கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்து உள்ளார்.

அதன் விபரம்:

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம், 2009ன் படி, டெட் தேர்வில், தேர்ச்சிபெற்றவர்களையே, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்.டெட் தேர்வில், அதிக தரம் பெற்றவர்களை, இனவாரி சுழற்சியில், ஆசிரியர் பணிக்கு நியமிக்கும்போது, அதே தேர்வில் தேர்ச்சி பெற்ற மற்றவர்களும், தங்களுக்கு ஆசிரியர் பணி வேண்டும் என, கோரிக்கை விடுக்கின்றனர்.இந்த நிலையை மாற்ற, ஆந்திரா போன்ற மாநிலங்களில் உள்ளது போல, டெட் தேர்வு என்பதை தகுதி தேர்வாக நடத்தி விட்டு, அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கு, தனியாக போட்டி தேர்வு நடத்தலாம்.டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும், இந்த தேர்வில் பங்கேற்க நிபந்தனை விதிக்கலாம் என, பொதுப்பள்ளி கல்வி வாரியம் பரிந்துரைத்தது.இந்த பரிந்துரைகளை, அரசு ஆய்வு செய்ததில், சில விபரங்கள் பரிசீலிக்கப் பட்டன.டெட் தேர்வின் தேர்ச்சி என்பது, ஏழு ஆண்டுகளுக்கு செல்லத்தக்கது என்ற நிலையில், வெயிட்டேஜ் முறையில் பின்தங்கி யவர்கள், டெட் தேர்விலா வது அதிக மதிப்பெண் பெற வேண்டும் என, மீண்டும் மீண்டும், டெட் தேர்வை எழுத வேண்டிய நிலை ஏற்படுகிறது.அதனால், தேர்வர் களுக்கு சிரமம் ஏற்படுகிறது.

விண்ணப்பதாரர்களின் கல்விசான்றிதழ் அடிப்படையில், வெயிட்டேஜ் மதிப்பெண்ணை பின்பற்றுவதால், பல ஆண்டுகளுக்கு முன், அடிப்படை கல்வித் தகுதி பெற்றவர்கள், சமீபத்தில் படித்தவர்களைவிட, வெயிட்டேஜ் மதிப்பெண் குறைவாக பெறும், முரண்பாடான நிலை ஏற்படுகிறது.மேலும், ஆண்டுதோறும் கல்வித் தகுதிக்கான மதிப்பெண்கள் வேறுபடுவதால், வெயிட்டேஜ் முறையின் படி,தரவரிசை பட்டியல்தயாரிப்பதில், தேர்வு நடத்தும் அமைப்புக்கும், இடர்பாடுகள் ஏற்படுகின்றன.

'வெயிட்டேஜ்' இனி இல்லை

எனவே, ஆந்திரா போன்ற மாநிலங்களில், இந்த வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படவில்லை. டெட் தேர்வுடன், போட்டி தேர்வும் தனித்தனியாக நடத்தப்படுகிறது.இந்த கருத்துகளின் அடிப்படையில், பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடந்த கூட்டத்தில், சில முடிவுகள் எடுக்கப்பட்டன.அதன்படி, ஆசிரியர் தகுதி தேர்வை தனியாகவும், அரசு பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டி தேர்வை தனியாகவும் நடத்தலாம் என, முடிவு செய்யப்பட்டுஉள்ளது.


விதிமுறை

போட்டி தேர்வை எழுது வதற்கு விண்ணப்பிப்பவர்கள், டெட் தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். போட்டித் தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி, விதிமுறைப்படி காலியிடங்களை நிரப்பும்.

இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்