ஜியோவின் அடுத்த அதிரடி!

தொடரும் ஜியோவின் அதிரடி!

ஜியோ போனின் இரண்டாம் பாகம் மற்றும் ஜியோ ஜிகா ஃபைபர் குறித்த அறிவிப்பை ரிலையன்ஸ் நிறுவனம் இன்று (ஜூலை 5) வெளியிட்டுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 41ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. இதில் முகேஷ் அம்பானி, நீட்டா அம்பானி (மனைவி), ஆகாஷ் அம்பானி (மகன்) மற்றும் இஷா அம்பானி (மகள்) உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது ஆகாஷ் அம்பானி மற்றும் இஷா அம்பானி இணைந்து அதிவேக இண்டர்நெட் கொண்ட ஜியோ ஜிகா ஃபைபர் சேவை, ஜியோ போன்-2, பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி உள்ளிட்ட பல சேவைகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டனர்.


ஜியோ போனின் இரண்டாம் பாகம் குறித்துப் பேசிய ஆகாஷ் அம்பானி, "வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று வெளியாகவுள்ள ஜியோ போன்-2வில் வாட்ஸ் அப், யூடியூப் மற்றும் பேஸ்புக் செயலிகளைப் பயன்படுத்த முடியும். இதன் விலை ரூ.2999" என்று தெரிவித்தார்.

ஜியோ ஜிகா ஃபைபர் குறித்து பேசிய அவர், "இதற்காக எங்கள் நிறுவனம் 250 மில்லியன் டாலர் வரை முதலீடு செய்துள்ளோம். இந்தச் சேவையை 1100 நகரங்களுக்கு விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம். இதில் இன்டர்நெட் வேகம் முன்பை விட அதிகமாக இருக்கும். இந்த ஜியோ ஜிகா ஃபைபர் சேவையில் இந்தியா முழுவதும் 24x7 நேரமும் அவரச உதவி செய்யும் குழுவும் அமைக்கப்படவுள்ளது" இவ்வாறு தெரிவித்தார்.


பிளாஸ்டிக் பாட்டில்களின் மறுசுழற்சி குறித்து பேசிய அவர், "எங்களுக்கு ஜம்மு நகரில் பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலை உள்ளது. இதில் தற்போது கார்பன் ஃபைபர்களை உற்பத்தி செய்யவுள்ளோம். இது எங்கள் நிறுவனத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல உதவும்" என்று தெரிவித்தார்.

ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு ரூ.1500 மதிப்பிலான ஜியோ பியூச்சர் போனை அறிமுகப்படுத்தியது. அறிமுகப்படுத்தப்பட்ட சில மாதங்களிலேயே இந்தப் போன் மிகுந்த வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Comments