பெற்றோரை செருப்பால் அடித்த ஆசிரியை சஸ்பெண்ட்
சேலத்தில் அரசு உதவிபெறும் பள்ளியில், மாணவனின் பெற்றோரை செருப்பால் அடித்த கணித ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சேலம் 4 ரோட்டில் அரசு உதவிபெறு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் படித்து வரும் 9ம் வகுப்பு மாணவர் ஒருவர், கடந்த இருதினங்களுக்கு முன்பு வகுப்பில் பேசிக்கொண்டிருந்தார். இதனை முதுகலை கணித பட்டதாரி ஆசிரியை ஒருவர், கண்டித்துள்ளார்.
மேலும், அவரது குடும்பத்தினரை பற்றி கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனிடையே, அந்த மாணவர்களின் பெற்றோர், நேற்று முன்தினம் பள்ளிக்கு வந்து முதல்வரிடம் இதுபற்றி கேட்டனர். அப்போது, அவர் சம்பந்தப்பட்ட ஆசிரியையிடம் அவர்களை அனுப்பி வைத்தார். நடந்த சம்பவம் குறித்து ஆசிரியையிடம், பெற்றோர் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென கோபமடைந்த ஆசிரியை, பெற்றோர்களை கடுமையான சொற்களால் பேசியுள்ளார். மேலும் இருதரப்பிற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், பள்ளியிலிருந்து பெற்றோர் திரும்பிச் செல்ல முயன்றபோது, அந்த ஆசிரியை தனது செருப்பை கழற்றி வீசியுள்ளார். இது பெற்றோரின் முதுகில் பட்டு கீழே விழுந்தது.
தொடர்ந்து செருப்பை எடுத்த ஆசிரியை, பெற்றோரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்,
இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வந்து விசாரித்தனர். இதனிடையே பள்ளி நிர்வாகம், சம்பந்தப்பட்ட கணித ஆசிரியையை சஸ்பெண்ட் செய்துள்ளது.
Comments
Post a Comment