'புதிய உயர் கல்வி ஆணையம் மாநில உரிமையில் தலையிடாது'

'புதிதாக உருவாக்கப்படவுள்ள, உயர் கல்வி ஆணையம், சுதந்திரமான அமைப்பாக செயல்படும்; மாநிலங்களின் உரிமையில் தலையிடும் வகையில்,
இந்த அமைப்பின் செயல்பாடு இருக்காது' என, மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.உயர் கல்வி நிறுவனங்களை நிர்வகிக்கும் அமைப்பான, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானியக்குழுவுக்கு பதில், புதிதாக, உயர் கல்வி ஆணையத்தை அமைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, உயர் கல்வி ஆணைய சட்ட திருத்த மசோதாவை, மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.3.5 கோடி : இதுகுறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர், லோக்சபாவில் நேற்றுகூறியதாவது: யு.ஜி.சி., அமைப்பு, 1956ல், துவங்கப்பட்டபோது, 20 பல்கலைகள், 500 கல்லுாரிகள் இருந்தன. அவற்றில், இரண்டு லட்சம் மாணவர்கள் படித்தனர். தற்போது, 900 பல்கலைகளும், 40 ஆயிரம் கல்லுாரிகளும் உள்ளன; 3.5 கோடி மாணவர்கள் படிக்கின்றனர்.எனவே, தற்போதுள்ள சூழலுக்கு ஏற்ப புதிய அமைப்பு தேவைப்படுகிறது. இதற்காக உருவாக்கப்படும், உயர் கல்வி ஆணையம், சுதந்திரமாக செயல்படும்; மாநில அரசுகளின் அதிகாரங்களில் தலையிடும் அமைப்பாக, இது செயல்படாது.எஸ்.சி., - எஸ்.டி.,மற்றும் இதர பிற்பட்டோர் பிரிவினருக்கு ஏற்கனவே அமலில் உள்ள ஒதுக்கீடுகளில் மாற்றம் இருக்காது.

இறுதி பணி : புதிய அமைப்பு, உயர் கல்வி துறையில் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும்.புதிய அமைப்பு தொடர்பாக, சம்பந்தப்பட்டோரிடம் இருந்து பெறப்பட்ட ஆலோசனைகள் அடிப்படையில், சட்ட திருத்த மசோதாவுக்கான வரைவை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Comments