தாக்குதலுக்கு உள்ளான ஆசிரியை உயிரிழப்பு
பிளேடால் தாக்கப்பட்ட ஆசிரியை உயிரிழப்பு!
ஆட்டோவில் சென்றபோது, பிளேடை வைத்து உறவினர் தாக்கியதில் ஆசிரியை பவித்ரா உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த பகவதி – லட்சுமியின் மகள் பவித்ரா. பி.ஏ.படித்துள்ள இவர் அங்குள்ள தனியார் பள்ளியொன்றில் ஆசிரியையாகப் பணியாற்றினார். பகவதி கூலி வேலை செய்து வருகிறார். இவரது சகோதரிகள் மயில், அனிதா ஆகியோர் பள்ளியில் படித்து வருகின்றனர்.

பவித்ராவுக்கு வரும் ஆகஸ்ட் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. நேற்று (ஜூலை 18) மாலை இவர் வீட்டிலிருந்து வெளியே கிளம்பினார். கோவிலுக்குச் சென்றுவருவதாகத் தனது குடும்பத்தினரிடம் கூறியிருந்தார். பழனியிலுள்ள ஆர்.எப். ரோட்டில், பவித்ரா ஒரு வாலிபரைச் சந்தித்தார். அவர்கள் இருவரும், அந்த வழியாக வந்த முத்துராமலிங்கம் என்பவரின் ஆட்டோவில் ஏறினர்.

ஆட்டோவில் பயணம் செய்தபோது, அந்த வாலிபரும் பவித்ராவும் சண்டையிட்டவாறு இருந்தனர். பழனி மலை அடிவாரப்பகுதிக்குச் சென்று கொண்டிருந்தபோது, பவித்ரா திடீரென்று அலறினார். ஆட்டோவை முத்துராமலிங்கம் நிறுத்தியவுடன், அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், ஆட்டோவினுள் ரத்த வெள்ளத்தில் கிடந்தார் பவித்ரா. அவர் அருகில் ஒரு பிளேடு கிடந்தது.

அப்பகுதியிலுள்ள சிலரது உதவியுடன், பவித்ராவைப் பழனி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் முத்துராமலிங்கம். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு போதுமான வசதிகள் இல்லாததால், மேல் சிகிச்சைக்காக அவர் மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி இன்று காலை பவித்ரா மரணமடைந்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில், ஆட்டோவில் பவித்ராவுடன் பயணித்தது அவரது உறவினர் மாயவன் என்பது தெரியவந்தது. அவரைத் தேடும் பணிகள் நடந்துவருகிறது. பவித்ராவை மாயவன் தாக்கியதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

Comments