2 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற 'தருமபுரி வாசிக்கிறது' நிகழ்ச்சி!
தருமபுரியில் உள்ள ஒளவையார்அரசு மகளிர் பள்ளியில் நடைபெற்ற வாசிப்பு நிகழ்ச்சியில் மாணவிகளுடன் அமர்ந்து வாசிக்கும் மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி, காவல் துறை கண்காணிப்பாளர் ப. கங்காதர்,
தருமபுரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் மாணவ, மாணவிகள் ஒரே நேரத்தில் பங்கேற்ற தருமபுரி வாசிக்கிறது' நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தருமபுரியில் வரும் ஆகஸ்ட் 3 முதல் 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவையொட்டி இந்தச் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
தகடூர்ப் புத்தகப் பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் ஆகியவை இணைந்து தருமபுரியில் முதல் முறையாக புத்தகத் திருவிழாவை வரும் ஆக. 3ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடத்துகின்றன. பாரதிபுரத்திலுள்ள மதுராபாய் திருமண மண்டபத்தில் இப் புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது.
இதனையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற தருமபுரி வாசிக்கிறது' என்ற சிறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அந்தந்தப் பள்ளி வளாகங்களிலேயே காலை 10 மணி முதல் முற்பகல் 11 மணி வரை இந் நிகழ்ச்சி நடைபெற்றது.
தருமபுரி ஒளவையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ப. கங்காதர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு. ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஆட்சியர் மலர்விழி பேசியது: வழக்கமாக பள்ளிகளில் மாணவ, மாணவிகள் படிப்பது மதிப்பெண்களைப் பெறுவதற்கான பாடப் புத்தகங்கள். ஆனால், பாடப் புத்தகத்தையும் தாண்டி, மனதுக்குப் பிடித்தமான ஒரு தலைப்பில் ஒரு புத்தகத்தைத் தேர்வு செய்து படிப்பது என்பது அந்தத் துறை தொடர்பான புலமையை வளர்க்கும். தொடர்ந்து வாசிப்போரின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும்.
இப்போது இணைய வழிப் புத்தகங்கள் வெளிவந்துவிட்டன. எனவே, வாசிப்பதும் எளிதாகி விட்டது. தினமும் தூங்கும் முன்பு அரை மணி நேரம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். கடைகளில் பொட்டலமாகக் கிடைக்கும் துண்டுச் சீட்டுகளும் கூட நமக்கு நிறைய தகவல்களைத் தரும்.
ஒவ்வொரு நாளும் புதிதுபுதிதாக 5 சொற்களை அறிந்து கொண்டால் மொழி ஆளுமை வளரும். தங்கு தடையின்றிப் பேச முடியும் என்றார் மலர்விழி.
நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ப. கங்காதர் பேசும்போது, ஒரு புத்தகம் என்பது அதனை எழுதியவரின் மொத்த வாழ்வும், அனுபவத்தையும் கொண்டது. 100 ஆண்டுகள் வாழ்வது என்பது மட்டுமே வாழ்க்கையல்ல, வாழும் ஆண்டுகளுக்குள் எத்தனைப் புத்தகங்களைப் படித்து வாழ்வின் முதிர்ச்சியைப் பெற்றுக் கொண்டோம் என்பதுதான் வாழ்க்கை என்றார் கங்காதர்
Comments
Post a Comment