அனைத்து பள்ளிகளிலும் நாளை (15.07.2018 ஞாயிற்றுக்கிழமை) கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட உத்தரவு

முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து பள்ளிகளிலும் நாளை கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15ம் தேதி கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட வேண்டும் என்று திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. இடையில் சில ஆண்டுகள் கல்வி வளர்ச்சி நாள் பெரும்பாலும் கருத்தில் எடுத்துக் கொள்ளாமல், பெயரளவில் கொண்டாடப்பட்டது.  


இந்த ஆண்டு அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களுக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அவசர சுற்றறிக்கை நேற்று அனுப்பியுள்ளனர். அதில், முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ம் தேதி கல்வி வளர்ச்சி நாள் அனைத்து பள்ளிகளிலும் கொண்டாட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, நாளை காமராஜர் பிறந்த நாள் வருகிறது. அன்று ஞாயிற்றுக்கிழமை. பள்ளி விடுமுறை நாளான நாளை மாணவர்கள் வரமாட்டார்கள். அதனால் ஞாயிற்றுக் கிழமை அன்று மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட கல்வி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். 

இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை என்பதால் மாணவர்கள் வராவிட்டால், திங்கட்கிழமை நடத்தவும் முடிவு செய்துள்ளனர். கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு அன்று காலை முன்னாள் முதல்வர் காமராஜர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தல், காமராஜர் கல்விக்கு செய்த தொண்டு குறித்து மாணவர்களிடையே சொற்பொழிவு நடத்துதல், கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

Comments