வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள்!: ஜூலை 15 முதல் தொடங்கும்

மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஜூலை 15-ஆம் தேதி முதல் ஒரு மாத காலத்துக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெறவுள்ளன.

இந்த வகுப்புகளில் அருகே உள்ள அரசு நூலகங்களிலிருந்து மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் என பொது நூலகத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 4,600-க்கும் மேற்பட்ட அரசு நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நூலகங்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக பொது நூலகத் துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் அதிகளவில் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டு வருகின்றனர். உறுப்பினராகச் சேரும் மாணவர்களின் தனித்திறனை ஊக்குவிக்கும் வகையில் ஓவியம், பேச்சு, கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக வாசிப்புத்திறனை மேம்படுத்துவதற்காக அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஒரு மாதம் சிறப்பு வகுப்புகள் நடைபெறவுள்ளன.
ஜூலை 15 முதல் தொடங்கும்: இது குறித்து பொது நூலகத்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஜூலை-15-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை வாசிப்பு மாதமாகக் கொண்டாடப்படும். இந்த ஒரு மாதத்தில் பள்ளிகளில் ஒரு நாள் ஒரு வகுப்புக்கு ஒரு பாடவேளை ஒதுக்கப்படும். ஒரே வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் மீண்டும் வாசிக்க வாய்ப்பு வழங்கப்படும். ஒரு சுற்று வாசிப்பு முடிவடைந்ததும் மீண்டும் அடுத்த சுற்று தொடங்கும். ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் இந்த வகுப்புகள் நடைபெறும்.
இந்த நேரத்தில் நன்னெறிக் கதைகள், படக் கதைகள், பொது அறிவு, தலைவர்கள் வரலாறு உள்பட பல்வேறு வகையான நூல்கள் பள்ளிகளுக்கு அருகில் அமைந்திருக்கும் அரசு நூலகங்களிலிருந்து நூலகர்கள் மூலம் மாணவர்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது தவிர தற்போது 14 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் நடமாடும் நூலக வாகனங்களை 20 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.

Comments