அடுத்த ஆண்டு முதல் 1-8 வரை பாடபுத்தகம், சீருடை மாற்றம் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு


அடுத்த ஆண்டு 1 முதல் 8ம் வகுப்பு வரை பாடதிட்டங்களும், சீருடைகளும் மாற்றப்படும், பள்ளி கழிவறைகளை சுத்தம் செய்ய ஜெர்மன் நாட்டில் இருந்து நவீன வாகனங்கள் வாங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபி பகுதியில் 14 இடங்களில் ஸ்மார்ட் வகுப்பறையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அடுத்த ஆண்டு 1 முதல் 8ம் வகுப்பு வரை சீருடைகளும், பாடதிட்டங்களும் மாற்றப்படும். 

அதே போன்று அரசு பள்ளிகளில் துப்புரவு பணியாளர் பற்றாக்குறை மற்றும் பணியாளர்கள் விடுமுறை காரணமாக பள்ளிகளில் கழிப்பறை சுத்தம் செய்யமுடியாத நிலை உள்ளது. இதனால் ஜெர்மன் நாட்டின் ரோட்டரி சங்கம் மூலமாக கழிப்பறைகளை சுத்தம் செய்ய 1000 நவீன வாகனங்கள் செப்டம்பர் மாத இறுதிக்குள் வாங்கப்படும்.

முதல் கட்டமாக 100 வாகனங்கள் வாங்கப்பட்டு ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு வழங்கப்படும். ஒரு வாகனத்தின் மூலம் ஒரு நாளைக்கு 20 பள்ளிகளில் கழிப்பறை சுத்தம் செய்ய முடியும். இந்த வாகனத்தின் அனைத்து செயல்பாடுகளும் இணையதளம் மூலம் இணைக்கப்பட்டுள்ளதால் முதன்மை கல்வி அலுவலர் முதல் பள்ளி கல்வித்துறை செயலர் வரை கண்காணிக்க முடியும். 

அதேபோன்று அடுத்த ஆண்டிற்குள் 3000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும். இதன்மூலம் அனைத்து தகவல்களையும் மாணவர்கள் எளிதில் தெரிந்து கொள்வதுடன், புதிய பாடதிட்டங்களை எளிதில் கற்க முடியும். அதேபோன்று செல்போனில் பாடங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். 

அடுத்த ஆண்டுக்குள் ரூ.490 கோடி மதிப்பீட்டில் அனைத்து பள்ளிகளுக்கும் கம்ப்யூட்டர் வழங்கப்பட்டு அவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்படும். இதன்மூலம் பள்ளி கல்வித்துறையின் செயல்பாடுகளை ஒரே நேரத்தில் கண்காணிக்க முடியும். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்