பொதுத்தேர்வில் இனி கடினமான கேள்விகளே கேட்கப்படும்'' - எச்சரிக்கை செய்யும் தேர்வுத்துறை!

பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் கடினமான கேள்விகள் கேட்டதும், தேர்வுத்தாள் திருத்தியபோது மதிப்பெண் அள்ளிப்போடுவதற்கு அணைபோட்டதும் ஏராளமான மாணவர்களை தனியார் சுயநிதிக் கல்லூரிகளை நோக்கிப் படையெடுக்கவைத்திருக்கிறது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு பொதுத்தேர்வில் சிந்தித்துப் பதிலளிக்கும்வகையில் 20 சதவிகிதக் கேள்விகள் இடம்பெறும் என்ற தகவலை வெளியிட்டிருக்கிறது தேர்வுத்துறை.

தேர்வுத்துறை

இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவில் 1,000 மதிப்பெண்ணுக்குமேல் பெற்றவர்கள் 11.23 சதவிகிதம் பேர். 900 - 1000 மதிப்பெண் வரை பெற்றவர்கள் 12.47 சதவிகிதம் பேர். 900 மதிப்பெண்ணுக்குக் குறைவாக பெற்றவர்கள் 75 சதவிகிதத்துக்கும் கூடுதலாக உள்ளனர். 1000 மதிப்பெண்ணுக்கும் குறைவாகப் பெற்ற மாணவர்கள் தற்போது தனியார் சுயநிதிக் கல்லூரியில் சேர கடுமையாகப் போராடிவருகின்றனர்.


`நடந்து முடிந்த பொதுத்தேர்வில், எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல் கடினமான கேள்விகள் கேட்டதும், தேர்வுத்தாள் திருத்தும்போது மதிப்பெண் அள்ளி வழங்குவதற்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதும் சுயநிதிக் கல்லூரிகளின் சேர்க்கைக்காக' என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டைத் தவிர்க்கும்விதமாக, ஆசிரியர்களுக்கு முன்னரே ஆலோசனை வழங்கும் சுற்றறிக்கையை அனுப்பியிருக்கிறது தேர்வுத்துறை. 

இதில், `அடுத்த ஆண்டு பொதுத்தேர்விலும் மாணவர்கள் யோசித்து பதிலளிக்கும் வகையில், 20 சதவிகிதம் கேள்விகள் இடம்பெறும். அதற்குத் தகுந்தாற்போல் மாணவர்களைத் தயார்செய்ய வேண்டும். மாணவர்கள் குறிப்பிட்ட பகுதியை மட்டும் படிக்காமல், பொதுத்தேர்வுக்குப் பாடப்புத்தகத்தின் அனைத்து பகுதிகளையும் முழுமையாகப் படிக்க வேண்டும்’ என்று ஆலோசனை வழங்கியிருக்கிறது

பத்து மற்றும் பதினொன்றாம் வகுப்புக்கு, ஏற்கெனவே உள்ள ப்ளூ பிரின்ட் முறை ஒழிக்கப்பட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு இன்னமும் ப்ளூ பிரின்ட் முறையில் நடத்தப்படுகிறது. ப்ளூ பிரின்ட் முறையைப் பின்பற்றுவதால் மாணவர்கள் பாடப்புத்தகத்தை முழுமையாகப் படிக்காமல் தேர்ந்தெடுத்துப் படித்து அதிக மதிப்பெண் பெறுகின்றனர். 

இதனால், பதினொன்றாம் வகுப்பில் படிக்கும்போது தனியார் பள்ளிகள் குறிப்பிட்ட பாடப்பகுதியை மட்டும் நடத்தி முடித்து அதிக மதிப்பெண் பெற்றுவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து பதினொன்றாம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு முறையைக் கொண்டுவரப்பட்டது. மேலும் பத்தாம், பதினொன்றாம் வகுப்புக்கு ப்ளூ பிரின்ட் முறை ஒழிக்கப்பட்டிருக்கிறது. 

அடுத்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்புக்குச் செல்லும் மாணவர்கள் புதிய பாடத்திட்டத்தில் படிப்பதால் அவர்களுக்கும் ப்ளூ பிரின்ட் முறை இருக்காது. இதனால் பாடப்புத்தகத்தை முழுமையாகப் புரிந்து படித்தால் மட்டுமே அதிக மதிப்பெண் பெற முடியும்.

Comments