ஆசிரியர் பணிநிரவல்: வலுக்கும் எதிர்ப்பு - கணிதப்பாட ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை!
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 10ஆம் வகுப்புகளுக்கான அனைத்துப்பாடங்களையும் பட்டதாரி ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றனர்.
அரசின் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு ஆண்டும் பல நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன.
இதனால் கிராமப்புற மாணவர்கள் தங்கள் வசிப்பிடங்களில் 6 முதல் 10 வகுப்பு வரையிலான உயர்நிலைக்கல்வியை எளிதாக பெற்று வருகின்றனர்.
RTE சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25% இடங்களை அரசாங்கமே கல்விக்கட்டணத்தை செலுத்தி படிக்க வைப்பதால் பெரும்பாலான உயர்நிலைப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 170க்கும் குறைவாகவே உள்ளது.
தற்போதுவரை இப்பள்ளிகளில் 6முதல் 8வகுப்புகளைக் கையாள 3பட்டதாரி ஆசிரியர்களும்,
9மற்றும் 10ஆம் வகுப்புகளைக் கையாள 5 பட்டதாரி ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இதனால் உயர்நிலைப்பள்ளிகளுக்கு குறைந்தபட்சம் 8பட்டதாரி ஆசிரியர்கள் என்ற ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில் 6முதல்10 வகுப்புகளுக்கான குறைந்தபட்ச ஆசிரியர் எண்ணிக்கையை 8இலிருந்து குறைத்து பணிநிரவல் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இப்பள்ளிகளில் ஒரே ஒரு கணித ஆசிரியர் 6முதல்10ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் கணிதப்பாடத்தை முழுமையாகக் கற்பித்து , மெல்லக் கற்கும் மாணவர்களையும் பொதுத்தேர்விற்கு தயார்செய்வது என்பது இயலாத காரியம். கணிதப்பாடத்தின் கடினமான புதிய பாடத்திட்டத்தின் காரணமாகவும் , வேலைப்பளு கூடுதலாக இருக்கும் என்பதாலும் கணிதப்பாடத்தைக் கூடுதலாகக் கையாள மற்ற பாட ஆசிரியர்கள் முன்வருவதில்லை.
போட்டித்தேர்வுகளையும், அகில இந்திய அளவிலான நுழைவுத்தேர்வுகளையும் மாணவர்கள் தைரியத்துடன் எதிர்கொண்டு வெற்றி பெற கணிதப்பாட புரிதல் மிகவும் அவசியமானது என மதிப்பிற்குரிய கல்வித்துறை செயலாளர் அவர்களும் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
*எனவே அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் 6முதல்10 வகுப்புகளைக் கையாள குறைந்தபட்சம் இரண்டு கணிதப்பட்டதாரி ஆசிரியர்களை அனுமதிக்க வேண்டும் என ஆசிரியர்கள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
Comments
Post a Comment