பள்ளி தரம் உயர்த்த நிபந்தனை !!! விதிகளை மாற்ற வலியுறுத்தல்

 ''பள்ளிகளை தரம் உயர்த்த, பொதுமக்கள் பங்களிப்பாக,
குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டியுள்ளது.
இந்த விதிமுறையை நீக்க வேண்டும்,'' என, தி.மு.க., -
எம்.எல்.ஏ., தங்கம் தென்னரசு வலியுறுத்தினார்.


சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:


அ.தி.மு.க., - மாணிக்கம்: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி
ஒன்றியம், கருப்பட்டி உயர்நிலைப் பள்ளியை,
மேல்நிலைப் பள்ளியாக, தரம் உயர்த்த வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்: விதிமுறைகள்
பூர்த்தியாகாததால், தரம் உயர்த்த இயலாது.

மாணிக்கம்: விதிமுறைகளை பூர்த்தி செய்கிறோம்.
தரம் உயர்த்த, அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்: கண்டிப்பாக நடவடிக்கை
எடுக்கப்படும்.

காங்., - வசந்தகுமார்: களக்காடு பகுதியில் உள்ள
மேல்நிலைப் பள்ளியில், இரு பாலாரும் படிக்கின்றனர்.
அதை, ஆண்கள் பள்ளி, பெண்கள் பள்ளி என, பிரிக்க
வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்: முதலில்,
உயர்நிலைப் பள்ளியாக பிரிக்க, நடவடிக்கை எடுக்கப்படும்.

தி.மு.க., - பூங்கோதை: ஆரம்பப் பள்ளிகளில்,
மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. ஆங்கில
மோகத்தால், குழந்தைகளை, ஆங்கிலப் பள்ளிகளில்
சேர்க்கின்றனர். எனவே, ஆரம்ப கல்வியில், தமிழ்
வழிக் கல்வியை போல், ஆங்கில வழி பள்ளிகளை
கொண்டு வர வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்:
இது குறித்து, ஆலோசனை நடந்து வருகிறது.

தி.மு.க., - தங்கம் தென்னரசு: நடுநிலைப் பள்ளியை,
உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த, பொதுமக்கள்
பங்களிப்பாக, ஒரு லட்சம் ரூபாய் செலுத்த வேண்டி
உள்ளது. அதே போல், உயர்நிலைப் பள்ளியை
மேல்நிலையாக தரம் உயர்த்த, இரண்டு லட்சம்
ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது.அந்த காலத்தில்,
அந்த விதி தேவையாக இருந்தது. தற்போது, மத்திய
அரசு பல்வேறு திட்டங்களின் கீழ், நிதி ஒதுக்குகிறது.
மாநில அரசும் நிதி ஒதுக்குகிறது.எனவே, பொதுமக்கள்
பங்களிப்பு தேவையில்லாதது. இந்த நிதியை திரட்ட
சிரமமாக உள்ளது. எனவே, பொதுமக்கள் பங்களிப்பு
தேவை என்ற விதியை நீக்க, அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்: நல்ல கருத்து.
இதுகுறித்து, முதல்வர் மற்றும் துணை முதல்வருடன்
கலந்து பேசி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது

Comments