மேசையுடன் கூடிய,'ஸ்கூல் பேக்'; கான்பூர் ஐ.ஐ.டி., மாணவர் சாதனை


பள்ளி குழந்தைகள், தங்கள் முதுகில் சுமந்து செல்லும் வகையில், எடை குறைவான, சிறிய மேசையுடன் கூடிய, 'ஸ்கூல் பேக்'கை, கான்பூர், ஐ.ஐ.டி.,யில் படித்த மாணவர், உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
உ.பி., மாநிலம், கான்பூரில் உள்ள, ஐ.ஐ.டி., எனப்படும், இந்திய தொழில்நுட்ப மையத்தில்
படித்த மாணவர், ஈஷான் சதாசிவன், 27.இவர், பள்ளி குழந்தைகள் பயன்படுத்தக்கூடிய, சிறிய மேசை இணைக்கப்பட்ட, ஸ்கூல் பேக்கை உருவாக்கி உள்ளார். 680 கிராம் எடையுள்ள இந்த பேக்கின் விலை, 400 ரூபாய் மட்டுமே.
இந்த பேக்கில், இலகு வகை டியூப்களால் ஆன, மடக்கும் கால்களுடன் கூடிய, சிறிய மேசை இணைக்கப்பட்டுஉள்ளது. பள்ளி குழந்தைகளின் முதுகில் உராய்வு ஏற்பட்டு பாதிப்பு வராமல் தடுக்கும் வகையில், தண்ணீர் புகாத துணியால், இந்த பேக் தயாரிக்கப்பட்டுள்ளது. பேக்கில் இருந்து, தேவைப்படும்போது, மேசையை தனியாக பிரித்து எடுக்கலாம். இதற்கு, 'டெஸ்கிட்' என, பெயரிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, ஈஷான் சதாசிவன் கூறியதாவது:இலகு ரக மேசையுடன் கூடிய ஸ்கூல் பேக்கை, தற்போது, நாடு முழுவதும், 10 மாவட்டங்களில், 17 ஆயிரம் மாணவர்கள் பயன்படுத்துகின்றனர்.
வருங்காலத்தில், இரவிலும் பயன்படுத்தும் வகையில், எல்.இ.டி., விளக்குடன் கூடிய மேசையுடன் ஸ்கூல் பேக் தயாரிக்கப்பட உள்ளது.
கடந்த, 2015ல், 'புரோஸாக் இன்னவேட்டர்ஸ் லிமிடெட்' என்ற பெயரில், 'ஸ்டார்ட் அப்' நிறுவனம் துவக்கினேன். அதற்கு, மத்திய அரசின் நிதியுதவியாக, 20 லட்சம் ரூபாய் கிடைத்தது.
இலகு ரக பேக்குகளை பயன்படுத்துவதால், பள்ளி குழந்தைகளுக்கு, முதுகு வலி வருவதை தடுக்க முடியும்.
உ.பி., ஜார்க்கண்ட், ம.பி., ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் அரசுகளுடன் சேர்ந்து, இலகு ரக பேக்குகளை விற்பனை செய்து வருகிறோம். தெலுங்கானா மாநில அரசுடனும், இது தொடர்பாக பேச்சு நடத்தி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்

Comments