நிஜத்தில் ஒரு ‘சாட்டை’ சமுத்திரக்கனி: பணி மாறுதலில் சென்ற இளம் ஆசிரியரை கட்டிப்பிடித்து அழுத மாணவர்கள்



திருவள்ளூரில் இளம் ஆசிரியர் ஒருவர் பணி மாறுதல் பெற்றுச் சென்றதை ஏற்காத மாணவர்கள் அவரை அனுப்ப மறுத்து கட்டிப்பிடித்து கெஞ்சிய காட்சி அனைவரையும் கண்ணீர் விட வைத்தது.

ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன்னுதாரணமாகவும், நல்ல வழிகாட்டியாகவும் இருந்தால் மாணவர்களுக்கு கற்றலில் பிரச்சினை ஏற்படாது. நல்ல நண்பன் நல்ல ஆசிரியராக இருக்க முடியும், அதுபோன்ற ஆசிரியர்களால் மாணவர்கள் கல்வி கற்றல் உயரும்.


அப்படிப்பட்ட இளம் ஆசிரியர் ஒருவர் பணி மாறுதல் பெற்றுச் சென்றபோது மாணவர்கள் அவரைப் பள்ளியை விட்டுச் செல்ல அனுமதி மறுத்து கட்டிப்பிடித்து அழுத சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு அரசுப்பள்ளியில் நடந்துள்ளது.


திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த வெளியகரம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 300 மாணவ, மாணவியர்கள் கல்வி பயில்கின்றனர். இந்தப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பகவான் என்ற இளைஞர் 5 ஆண்டுகளுக்கு முன் பணிக்கு வந்தார். மாணவ மாணவிகளுக்கு சக தோழனாக இருந்து அவர் கல்வி கற்றுத்தர ஆங்கிலப் பாடம் அனைத்து மாணவர்களுக்கும் பிடித்தமான பாடமானது.

பாடம் எடுப்பதில் அவரது அணுகுமுறை, பழகுவதில் கண்ணியம், வழிகாட்டுவதில் எடுத்துக்கொண்ட சிரத்தை காரணமாக அனைத்து வகுப்பு மாணவ மாணவியருக்கு பிடித்தமானவராக மாறிப்போனார் பகவான். இந்நிலையில் பணியிட மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொண்டார் பகவான்.

பின்னர் பகவானுக்கு மாறுதல் கிடைத்தது, இதை அறிந்த மாணவ மாணவியர்கள் கதறி அழுதனர். நீங்கள் பள்ளியை விட்டு போகக் கூடாது, நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தனர். ஆனால் பணியிட மாற்றம் பெற்றதால் அதற்கான ஆர்டரை வாங்கப் பள்ளிக்கு வந்தார்.

இதை அறிந்த அனைத்து பள்ளி மாணவ, மாணவியரும் வகுப்புகளைப் புறக்கணித்து அவர் முன்னால் அமர்ந்து பள்ளியை விட்டுப் போகாதீர்கள் என்று அழுதனர். அவர்களுக்கு சமாதானம் கூறிய ஆசிரியர் பகவான் ஒரு கட்டத்தில் அவர்களது அன்பை எண்ணி அவரும் கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் ஒருவாறு மனதை தேற்றிக்கொண்டுக் கிளம்பினார்.

ஆனால் மாணவ, மாணவியர் அவரை சூழ்ந்துகொண்டு கட்டிப்பிடித்தபடி எங்களை விட்டுப் போகாதீர்கள் சார் என்று கதறி அழுதனர். இதனால் அவர் வெளியே செல்ல முடியவில்லை. மற்ற ஆசிரியர்கள் வந்து சமாதானம் செய்தும் மாணவர்கள் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இதனால் வேறு வழியில்லாமல் போலீஸை வரவழைத்து போலீஸார் சமாதானப்படுத்தி பின்னர் ஆசிரியரைப் போக அனுமதித்தனர்.


ஆனாலும் அவர் போன பின்னரும் வகுப்புகளைப் புறக்கணித்து அனைவரும் போராட்டம் நடத்தினர். அவர் இல்லாமல் நாங்கள் பள்ளிக்கு வரமாட்டோம், இழுத்துப் பூட்டுவோம் என்று மாணவ மாணவியர் ஆவேசமாகத் தெரிவித்தனர். இப்படி ஒரு ஆசிரியரா? ‘சாட்டை’ படத்தில் சமுத்திரக்கனி பள்ளி ஆசிரியராக வந்து மாணவர்களின் நாயகனாக மாறுவார்.

அவர்மீது மிகுந்த அபிமானம் பொழியும் மாணவர்கள் அவரை மாறுதல் பெற்று போகும்போது அவரை அனுமதிக்க மறுத்து கண்ணீர் சிந்துவார்கள். அப்போது சமுத்திரக்கனி மாற்றத்தை ஏற்றுக்கொள்ளப் பழகவேண்டும் என்று நல்ல அறிவுரை கூறிவிட்டு பிரியாவிடை பெற்றுச் செல்வார்.

அந்த சினிமா காட்சியை நினைவூட்டும் வண்ணம் ஆசிரியர் பகவானின் நற்செயல்கள் அமைந்ததைக் கண்டு பெற்றோரும், சக ஆசிரியரும் நெகிழ்ந்து போயினர்.

Comments