வேலூர் வருவாய் மாவட்டத்தில் 5 கல்வி மாவட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்தது

வேலூர் வருவாய் மாவட்டத்தில் 5 கல்வி மாவட்டங்கள் நேற்றுமுதல் செயல்பாட்டிற்கு வந்தது. தமிழகத்தில் மாணவர்களின் கல்வித்தரம் மேம்படுத்தவும், தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கவும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் நிர்வாக சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டு அனைத்து வகையான பள்ளிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு மாநிலம் முழுவதும் புதிய கல்வி மாவட்டங்கள் உருவாக்கி சமீபத்தில் அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி வேலூர் வருவாய் மாவட்டத்தை 5 கல்வி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. வேலூர் வருவாய் மாவட்டத்தில் ஏற்கனவே, வேலூர் மற்றும் திருப்பத்தூர் கல்வி மாவட்டங்கள் செயல்பட்டு வந்தன. தற்போது அரக்கோணம், ராணிப்பேட்டை, வாணியம்பாடி ஆகிய 3 கல்வி மாவட்டங்கள் கூடுதலாக பிரிக்கப்பட்டது. இதையடுத்து வேலூர் வருவாய் மாவட்டத்தில் நேற்றுமுதல் 5 கல்வி மாவட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்தன.

இந்நிலையில் அரக்கோணம் கல்வி மாவட்ட அலுவலகம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமையிடமாகக் கொண்டு செயல்படத் தொடங்கியது. இந்த அலுவலகத்தை எம்எல்ஏ சு.ரவி நேற்று குத்துவிளக்கு ஏற்றி, பெயர் பலகையை திறந்து வைத்தார். அரக்கோணம் கல்வி மாவட்ட அலுவலராக குணசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அரக்கோணம் அடுத்த பரமேஸ்வர மங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார். மேலும் அங்கு மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகம், சீருடைகள் வழங்கினார். ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை புதிய மாவட்ட கல்வி அலுவலராக (பொறுப்பு) பி.முருகன் நேற்று பதவியேற்றார். இந்த அலுவலகத்தில் அவருடன் 15 பணியாளர்கள் புதியதாக பொறுப்பேற்றனர். இதையடுத்து பி.முருகன் ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்களை வழங்கினார்.

Comments