அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்க திட்டம் : செங்கோட்டையன் தகவல்

அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்குவது குறித்து முதல்வருடன்  ஆலோசனை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 


பள்ளிகல்வித்துறை மானிய கோரிக்கையில் விவாதத்தின் போது, எம்எல்ஏ செம்மலை ( மேட்டூர்) பேசியதாவது: பாட திட்ட மாற்றம் ரேங்கிங் முறையை மாற்றியது உள்ளிட்ட பல அம்சங்களில் பள்ளி கல்வித்துறை புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் பள்ளிகள் மீதான பெற்றோரின் மோகத்தை குறைக்கும் வகையில் ஆங்கில வழியிலான எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை அரசு பள்ளிகளில் தொடங்க வேண்டும். அனைத்து பள்ளிகளும் சமச்சீர் பாடத்திட்டத்தின்படி, இயங்குவதால் மெட்ரிக்குலேசன் என்ற பெயரை தனியார் சுய நிதி பள்ளிகள் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.

அமைச்சர் செங்கோட்டையன் :  அரசு பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி தொடங்குவது குறித்து முதல்வர்,  துணை முதல்வருடன் கலந்து பேசி ஆலோசனை நடத்தி விரைவில் முடிவு  எடுக்கப்படும். மெட்ரிக்குலேசன் பெயர் மாற்றுவது குறித்து அரசு பரிசீலிக்கும். 


செம்மலை : அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி கொண்டு வந்தால்தான் போட்டியை தவிர்க்க முடியும். வயிற்றில் குழந்தை  இருக்கும் போதே தனியார் பள்ளிகளில் எல்கேஜியில் சேர்ப்பதற்கு பதிவு செய்கின்றனர். எனவே, விரைந்து இதற்கான முடிவு எடுக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் 4 வயதிற்குள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கின்றனர். 

அமைச்சர் செங்கோட்டையன் : அரசு கண்டிப்பாக விரைந்து முடிவு எடுக்கும். அங்கன்வாடி மையங்களுடன் ஒருங்கிணைந்து உள்ள ஆரம்ப பள்ளிகளில் 90 சதவீதம் மாணவர்கள் படிக்கின்றனர். 5 வயது பூர்த்தியானால் மட்டுமே அரசு பள்ளிகளில் சேர்க்க முடியும் என்ற விதி உள்ளது. தனியார் பள்ளிகளில் 4 வயதுக்கு முன்னரே குழந்தைகளை சேர்ப்பது தொடர்பாக உரிய சட்ட விதிகள் கொண்டு வர நடவடிக்ைக எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது.

Comments