குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்ய இந்திய பெற்றோர் செலவிடும் நேரம் பற்றித் தெரியுமா?

படிக்கிற பசங்களை காலையில் நேரத்துக்கு பள்ளிக்கூடம் அனுப்பறது பெற்றோர்களுக்கு மிகப்பெரிய வேலைன்னா. சாயங்காலம் பள்ளிக்கூடம்விட்டு வந்ததும் இன்னிக்கு வீட்டுப் பாடம் என்னனு கேட்டு பண்ணவைக்கறது அதைவிட பெரிய வேலை. நம்ம ஊர்லதான் இப்படியா? மற்ற ஊரிலும் இப்படித்தானா?' எனப் பெற்றவர்கள் சலிச்சுக்கிறதை கேட்டிருப்போம். அதுதான் உண்மை. சமீபத்தில், வெளியான ஓர் ஆய்வறிக்கையில், இந்திய பெற்றோர்கள்தான், ஒரு வாரத்தில் அதிகம் வீட்டுப்பாடம் சொல்லிக்கொடுக்கிறதா குறிப்பிடப்பட்டுள்ளது.

குழந்தைகள், எதையும் தைரியத்துடன் செய்துபார்க்கும் ஆர்வமும் துணிச்சலும்கொண்டவர்கள். ஆனால், வீட்டுப்பாடம் செய்வதென்றால் மட்டும் சோர்வு. பெரும்பாலான வீடுகளில் அப்பாவும் அம்மாவும்தான் வீட்டுப்பாடம் செய்துகொடுப்பார்கள். வளர்ந்துவரும் டிஜிட்டல் உலகில், குழந்தைகளுடன் சேர்ந்து வீட்டுப்பாடம் செய்வது என்பது இயலாத காரியம்.

பள்ளி, டியூஷன், ஆசிரியர்கள், பாடங்கள் எனக் காலை முதல் இரவு வரை கல்வி நேரத்தை மட்டுமே கடந்துவருகிறார்கள். 'குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் சொல்லிக்கொடுக்கும் அளவுக்கு எங்களுக்கு நேரம் இல்லை' என்பதே பெரும்பான்மையான பெற்றோர்களின் பதில்.

ஆனால், வீட்டுப்பாடம் சொல்லிக்கொடுக்கும்போதுதான், நம் குழந்தை என்ன பயில்கிறது என்று அறிந்துகொள்ள முடிகிறது. மேலும், உங்கள் குழந்தையுடன் தினமும் பேசவும் வாய்ப்பு கிடைகிறது. இவ்வாறு பேசுவதன் மூலமாக, அவர்கள் பள்ளியைப் பற்றியும், படிக்கும் சூழல் பற்றியும் தெரிந்துகொள்ளலாம். இதுபோன்ற நிகழ்வினால், குழந்தை சலிப்படையாமல் மகிழ்ச்சியுடன் சிறப்பாக கல்வி பயிலும். பள்ளிச் செல்லும் 4 முதல் 18 வயது வரையான குழந்தைகளுக்குப் பெற்றோர்கள், வீட்டுப்பாடம் செய்வதற்காக வாரத்துக்கு எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள்?

குழந்தைகளின் கல்விதிறன் மேம்பாட்டை நோக்கமாகக்கொண்ட Varkey Foundation என்ற தொண்டு நிறுவனம் சார்பில், கடந்த டிசம்பர் 8-ம் தேதி முதல் ஜனவரி 15-ம் வரை ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், 29 நாடுகளில் 27,500 பெற்றோர்களிடம், அவர்களின் குழந்தைகளின் கல்வி தொடர்பான கேள்விகள் மற்றும் குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்வதற்காக எவ்வளவு நேரத்தைச் செலவிடுகிறீர்கள் என்ற கேள்விகளுடன் ஆய்வு நடத்தப்பட்டது. இந்தியாவில் மட்டும் 1,000 பெற்றோர்களிடம் இது தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டது.இந்த ஆய்வின் முடிவில் 29 நாடுகளில், அதிகபட்சமாக இந்தியாவில் வாரத்துக்கு 12 மணி நேரம் குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்வதற்காக பெற்றோர்கள் நேரம் செலவிடுகின்றனர். வியட்நாம் 10.2 மணி நேரமும், துருக்கி மற்றும் கொலம்பியா 8.7 மணி நேரமும், இந்தோனேசியா 8.6 மணி நேரமும் செலவிடுகின்றனர்.

குறைந்தபட்சமாக ஜப்பான் பெற்றோர்கள் வாரத்துக்கு 2.6 மணி நேரமே செலவிடுகின்றனர். மலேசியா, சிங்கப்பூர், பிரேசில், அர்ஜென்டினா, சீனா, இத்தாலி நாட்டினர் 7 முதல் 8 மணி நேரமும், அமெரிக்கா, கனடா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி நாட்டினர் 4 முதல் 6 மணி நேரமும், பிரான்ஸ், இங்கிலாந்து, பின்லாந்து, ஜப்பான், நாட்டினர் 2 முதல் 3 மணி நேரமும் குழந்தைகளுடன் வீட்டுப்பாடம் நேரத்தைச் செலவிடுகின்றனர். உலகளவில் ஒரு வாரத்துக்கு சராசரியாக 6.7 மணி நேரம், குழந்தைகளுடன் வீட்டுப்பாடம் செய்வதற்காக பெற்றோர்கள் நேரத்தைச் செலவிடுகின்றனர்.

இந்தியாவில் வீட்டுப்பாடம் செய்ய பெற்றோர்கள் குழந்தைகளுடன் செலவிடும் நேரம்

7 மணி நேரத்துக்கும் மேல் - 62% பேர்

4 முதல் 7 மணி நேரம் - 19% பேர்

2 முதல் 4 மணி நேரம் - 9% பேர்

1 முதல் 2 மணி நேரம் - 4% பேர்

குறைந்தபட்சம் 1 மணி நேரம் - 1% பேர்

நேரம் செலவிடாதவர்கள்- 5% பேர்

இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வில், குழந்தைகளுக்குக் கிடைக்கும் கல்வி, 87 சதவிகிதம் மட்டுமே தரமானதாக இருக்கிறது. 5 சதவிகித கல்வி, தரமற்றதாக இருப்பதாக ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. அதேபோல, இலவசமாகக் கிடைக்கும் கல்வியில் 47 சதவிகிதம் தரமானதாகவும், 34 சதவிகிதம் தரமற்றதாகவும் இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் குழந்தைகளின் கல்வித் தரமானது, இந்தியாவில் 72% முன்னேற்றம் அடைந்துள்ளது.குழந்தைகளின் சிறந்த கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டியது பெற்றோர்களே. குழந்தைகளின் மூளை, 20 நிமிடங்களுக்கு ஒருமுறை கவனச்சிதறல் அடையும். எனவே, வீட்டுப்பாடம் செய்யும்போது 20 நிமிடங்களுக்கு ஒருமுறை அவர்களை 5 நிமிடங்கள் ரிலாக்ஸ் செய்ய அனுமதிக்க வேண்டும். ஆனால், அந்த நேரத்தில் டிவி பார்க்கவோ, வீடியோ கேம்ஸ் விளையாடவோ விடாமல், சிரித்து பேசலாம். கூடி விளையாடலாம்.

குழந்தைகளுக்கு என்ன வீட்டுப்பாடம் கொடுத்தார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு, அது தொடர்பான தகவல்களை நாம் இணையத்தில் தேடி, குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுத்தால், அதிக ஆவலுடன் விரைவாகவும் மகிழ்ச்சியோடும் வீட்டுப்பாடத்தை செய்து முடிப்பார்கள். உலகளவில் பெற்றோர்கள், குழந்தைகள் மீது காட்டும் அக்கறையைவிட இந்தியப் பெற்றோர்கள் 2 மடங்கு அக்கறை காட்டுகிறார்கள் என்பது உண்மையிலேயே பாராட்டவேண்டிய விஷயம்.

சின்ன வயசில் உங்க வீட்டுப்பாடத்தை முடிக்க, உங்க பெற்ரோர் எப்படியெல்லாம் உதவி செஞ்சாங்கனு கமெண்ட்டில் சொல்லுங்களேன்.

Comments

Post a Comment

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்