டெங்கு கொசுவை அழிப்பது எப்படி? அரசுப் பள்ளி மாணவர்கள் அசத்தல் கண்டுபிடிப்பு!


கரூர் மாவட்டம், வெள்ளியணையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள், மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் டெங்கு கொசுவை ஒழிக்க இயற்கை முறையிலான அமைப்பைக் கண்டுபிடித்து அசத்தியிருக்கிறார்கள்.

இந்தப் பள்ளியில், அறிவியல் ஆசிரியராக இருக்கும் தனபால், மாணவர்களை ஊக்கப்படுத்திப் பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளைச் செய்யவைக்கிறார்.

அந்த வகையில், எளிதாகக் கிடைக்கும் பொருள்களைக்கொண்டு, சுற்றுச்சூழலுக்கும் மனிதர்களுக்கும் பாதிப்பில்லாத வகையில் டெங்கு கொசு ஈர்ப்பான் அமைப்பை இந்த பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் ஹரிகிஷோர், ஹரிஹரன் என்ற இரண்டு மாணவர்கள் கண்டுபிடித்து அசத்தியிருக்கிறார்கள். 

இந்தக் கண்டுபிடிப்பு, அந்தப் பகுதி மக்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அதோடு, பல விருதுகளையும் பாராட்டுகளையும் வாங்கிக் குவித்திருக்கிறது.

இதுபற்றி, அந்த இரு மாணவர்களிடமும் பேசினோம். "மக்களுக்குப் பயன்படக்கூடிய ஏதாவது ஒரு கண்டுபிடிப்பைக் கண்டறிய நினைத்தோம். அப்போதான், இந்தப் பகுதி மக்கள் டெங்கு கொசு பாதிப்பில் அவதியுற்றது தெரிந்தது. 

உடனே, அது சம்பந்தமான கண்டுபிடிப்பை அறிய ஆய்வு பண்ணினோம். வேஸ்ட்டான தண்ணீர் கேனில் வெந்நீர், சர்க்கரை மற்றும் ஈஸ்ட்டைச் சேர்த்து, நன்றாக மூடி, அதை வெயிலில் இரண்டு மணி நேரம் வைக்க வேண்டும். நொதித்தல் நடைபெறும். 


அதில் இருந்து கார்பன் டை ஆக்ஸைடு வாயு வெளிவரும். கொசுக்களுக்கு மிகவும் பிடித்தமான அந்த வாயுவால் கவரப்பட்டு, அந்த கலன் நோக்கி கொசுக்கள் வரும். அந்த கொசுக்களை இன்னும் ஸ்பீடாக ஈர்க்க, அந்தக் கலன் அருகே ஒரு சிறிய மின்விசிறி இருக்கும். அதில் கவரப்படும் கொசுக்களை எலெக்ட்ரிக் ஷாக் வெளிப்படும் அமைப்பின் மூலம் அழிக்கப்படும். 

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத, அதிகம் செலவில்லாத இந்தக் கண்டுபிடிப்பு பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கு. இதை அரசின் அனுமதியோடு, மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வர இருக்கிறோம். அதற்கு, இந்த அமைப்பை இன்னும் எளிமைப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறோம்" என்றார்.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்