நீட் தேர்வு: பெற்றோர், மாணவர்கள் கடும் அவதி; தேர்வை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்; ஹிந்தி வினாத்தாளால் குளறுபடி-ஹிந்தி வினாத்தாளால் தாமதமான தேர்வு!

வினாத்தாள் குளறுபடியால் மாணவர்கள் நீட் தேர்வு எழுத தாமதமானதால் மதுரை நரிமேடு நாய்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி முன்பு குவிந்த பெற்றோர் மற்றும் பொதுமக்கள்.மதுரையில் நீட் தேர்வு மையம் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்வில், தமிழுக்குப் பதில் ஹிந்தி மொழியில் வினாத்தாள் அளிக்கப்பட்டதால் பல மணி நேரம் தாமதமாக தேர்வு தொடங்கி நடைபெற்றது.
 இதையடுத்து தேர்வை ரத்து செய்யக் கோரி அம்மையம் முன்பு முன்னாள் எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினர் 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
 நரிமேடு பகுதியில் கேந்திரிய வித்யாலயா மற்றும் நாய்ஸ் மெட்ரிக் பள்ளி மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. தேர்வு காலை 10 மணிக்குத் தொடங்கியதும் ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் அச்சிடப்பட்ட வினாத்தாள்கள் விநியோகிக்கப்பட்டன. குறிப்பிட்ட 5 தேர்வறைகளில் ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் மட்டும் அச்சிடப்பட்ட வினாத்தாள்கள் தரப்பட்டன. தமிழ் மொழியிலான வினாத்தாள் கொடுக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் தேர்வு அலுவலர்களிடம் முறையிட்டனர். இதையடுத்து, ஹிந்தி மொழியில் வினாத்தாள்கள் திரும்பப் பெறப்பட்டன. மொத்தம் 118 பேருக்கான வினாத்தாள்கள் ஹிந்தி மொழியில் இருந்தன. ஆனால், அதில் 6 பேர் வராததால் 112 பேருக்கு வினாத்தாள்களை மாற்றிக் கொடுக்க வேண்டியிருந்தது. மற்ற 468 பேருக்கு காலை 10 மணிக்குத் தேர்வு தொடங்கி பகல் 1 மணிக்கு நிறைவடைந்தது.
 வினாத்தாள்கள் மாறிய விவகாரம் சிபிஎஸ்இ உயரதிகாரிகளிடம் விளக்கப்பட்டது. பல மணி நேரத்துக்குப் பின்னர் ஆங்கிலம், தமிழ் அச்சிடப்பட்ட வினாத்தாள்களின் நகல்கள் அந்த தேர்வறைகளுக்கு கொண்டு வரப்பட்டன. அதைத் தொடர்ந்து 22 பேருக்கு பகல் 12.45 மணிக்குத் தொடங்கி 3.30 மணி வரை தேர்வு நடத்தப்பட்டது. பின்னர் 90 பேருக்கு பிற்பகல் 2.45 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதனிடையே தேர்வு தாமதம் காரணமாக தேர்வறைக்குள்ளேயே குறிப்பிட்ட மாணவ, மாணவியருக்கு மட்டும் மதிய உணவு வழங்கப்பட்டது. இப்பிரச்னையால் பள்ளியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
 ஆர்ப்பாட்டம்: வினாத்தாள் குழப்பத்தைக் கண்டித்து, இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ) சார்பில் நாய்ஸ் பள்ளி முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலர் செல்வராஜ் மற்றும் முன்னாள் எம்எல்ஏ. ஆர்.அண்ணாதுரை ஆகியோர் பங்கேற்றனர்.
 அவர்கள் திடீரென சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதையடுத்து தல்லாகுளம் காவல் ஆய்வாளர் பெத்துராஜ் தலைமையிலான போலீஸார், 13 பேரை கைது செய்தனர்.
 "தேர்வுத்தாளில் ஆங்கில வினாக்கள் முதல் பக்கத்திலும், மறு பக்கத்தில் தமிழிலும் வினாக்களும் இடம் பெற்றிருந்தன. அதில் எதைத் தேர்வு செய்து எழுத விருப்பமோ அதை தேர்வு செய்து கொண்டோம். இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல் ஆகிய பாடங்களில் இருந்து மொத்தம் 180 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு வினாவுக்கும் தலா 4 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
 வினாக்கள் பெரும்பாலும் சிபிஎஸ்இ கல்வி அடிப்படையிலேயே கேட்கப்பட்டிருந்தன. இதனால் மாநில வழி பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு கடினமாக இருந்திருக்கும். இயற்பியல், வேதியியல் வினாக்கள் கடினமாகவும், மற்றவை எளிதாகவும் இருந்ததாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்