மலம் அள்ளுபவர்களின் பிள்ளை டாக்டராகக் கூடாதா?" பா.இரஞ்சித் முன்னிலையில் சிறுவன் கேள்வி


ஹோய்...." என்ற சிறுவர்களின் உற்சாகக் கூச்சலே மைதானத்துக்குள் நுழையும் நம்மை வரவேற்றது. பிங்கர் ஆன் லிப்ஸ் (Finger on lips), சத்தம் போடாதே போன்ற வகுப்பறையில் அடிக்கடி கேட்கும் வார்த்தைகளை ஐந்து நாள்களும் கேட்காமல் இருக்கும் மகிழ்ச்சி, அந்த உற்சாகத்தில் நிறைந்து தளும்பியது.

'நீலம்' அமைப்பு, பள்ளி விடுமுறையின்போது மாணவர்களுக்கான கலை, பண்பாட்டு முகாம்களைத் தொடர்ந்து நடத்திவருகிறது. இவ்வமைப்பை முத்தமிழ் முன்னெடுத்து வருகிறார்.


இந்த வருட கோடை விடுமுறைக்கான முகாம், மே 9 முதல் 13 வரை நடைபெற்றது. இதில், சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம், ராமநாதபுரம் உள்ளிட்ட பல ஊர்களிலிருந்து சுமார் 200 மாணவர்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்குப் பொம்மலாட்டம், சிலம்பாட்டம், பறையாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், நாட்டுப்புறப் பாடல்கள், ராப் பாடல்கள், குறும்படப் பயிற்சி, கிராஃப், கதை சொல்லல் உள்ளிட்ட பல பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பயிற்சியின் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை (மே 13) மாலை சிறப்பாக நடைபெற்றது. விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக, இயக்குநர் பா.இரஞ்சித், நிகழ்ச்சித் தொகுப்பாளினி டி.டி (திவ்யதர்ஷினி), எழுத்தாளர் சல்மா உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

சிறுவர்கள் தாங்கள் பயின்றதை அருமையாக நடித்தும் ஆடிப் பாடியும் காண்போரைக் கட்டிப்போட்டனர். காஷ்மீரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட ஆசிஃபா பற்றி நிழற்கூத்து ஒன்றை நிகழ்த்திக் காட்டினர். குதிரை மேய்க்கச் செல்லும் ஆசிஃபா, கோயிலுக்குள் அடைக்கப்பட்டது, ஒவ்வொரு நாளும் வலியுடன் கழிவது எனச் சிறுவர்கள் காட்சிப்படுத்திய விதம் பார்வையாளர்களை நெகிழச்செய்தது.

உலகின் பல நாடுகளில் உள்ள பூர்வகுடிகள்போல வேடம் அணிந்து 'கேட் வாக்' செல்ல, பின்னொலியில் அந்தப் பூர்வகுடிகள் பற்றிய செய்திகளை ஒருவர் வாசித்தது புதிய அனுபவத்தைத் தந்தது. 'ஒரு கனவு' எனும் குறும்படம் திரையிடப்பட்டது. ஏழெட்டு குழந்தைகள் தங்களின் பெயர், பெற்றோர் செய்யும் வேலை, எங்கிருந்து வருகிறோம் என வரிசையாகச் சொல்லிக்கொண்டே வந்தனர். அவர்கள் சொல்லிய பதில்களில் ஒன்றிரண்டைத் தவிர மற்றவை ஒன்றுபோல இல்லை. எதற்காக இவர்கள் இவற்றைக் கூறுகிறார்கள் எனப் பார்வையாளர்கள் யோசித்துக்கொண்டிருக்கும்போதே, 'தாங்கள் என்ன படிக்க விரும்புகிறோம்?' என்ற கேள்விக்கு, 'நான் டாக்டராகணும்' என ஒரே பதிலைச் சொன்னார்கள். குறும்படத்தில் வந்த அனைவருமே, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்கள். இவர்களின் கனவு நிறைவேறுமா எனும் கேள்வியோடும் #BanNeet என்பதோடும் படம் முடிவடைந்தது. இதுவும் பயிற்சியின் ஐந்து நாள்களில் எடுக்கப்பட்டது.

குறும்படத்தை அடுத்து நாடகம். பத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள், பெரிய ஸ்டூடுலில் ஏறுவதற்கு முயல, ஏற்கெனவே அதன்மேல் அமர்ந்திருக்கும் ஒருவர், அவர்களை ஏறவிடாமல் தடுக்கிறார். அதையும் மீறி ஏறுவதற்கான போராட்டங்களை மேற்கொள்கின்றனர்.

அதில் ஒரு சிறுவன், ``கீழே இருக்கிறவங்க எப்பவுமே கீழேயே இருக்கணுமா?"


``மலம் அள்ளுறவங்க புள்ளை டாக்டராகக் கூடாதா?" - எனச் சமூகத்தை நோக்கிய சாட்டையடியான கேள்விகளை எழுப்பினான்.

அவற்றை மற்றவர்கள் எதிரொலித்தனர். நீட் தேர்வு எழுதச் சென்றவர்களை, சோதனை எனும் பெயரில் மனச்சோர்வுக்குள்ளாக்கியது தொடர்பாக, அவன் எழுப்பிய கேள்விகளுக்குப் பார்வையாளர்களிடம் பலத்த கரவொலி எழுந்தது. இயக்குநர் பா.இரஞ்சித் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள், சிறுவனின் நடிப்பைக் கூர்ந்து கவனித்தனர். கவிஞர் 'இன்குலாப்' எழுதிய 'மனுஷங்கடா' பாடலோடு நாடகம் நிறைவடைந்தது.

நிகழ்ச்சிகளின் நிறைவில், திவ்யதர்ஷினி, "நமக்கு மேலானவர்கள் யாருமில்லை; கீழானவர்களும் யாரும் இல்லை என்பதை நாம் உணர வேண்டும்" எனக் குறிப்பிட்டார். எழுத்தாளர் சல்மா, "நீட் தேர்வு விரைவில் அகலும். இந்த மாணவர்களின் கனவுகள் நிறைவேறும்'' என ஊக்கம் கொடுத்தார்.

இயக்குநர் பா.இரஞ்சித் பேசுகையில், ``என்னுடைய சின்ன வயதில் இதுபோல உற்சாகப்படுத்தி, திறமைகளை மேம்படுத்திக்கொள்ள வாய்ப்பு கிடைக்கவில்லை. கலை பண்பாட்டுத் தளத்தில், சிறுவர்கள் மத்தியில், நீலம் அமைப்பின் முத்தமிழ் சிறப்பாகச் செயல்படுகிறார்" என்று நெகிந்தார்.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்